சிவாஜிக்கே பிடித்த அவரது அந்த நாலு கேரக்டர்கள்... அட அத்தனையும் சூப்பர் ஹிட்டாச்சே!

 
sivaji ganesan

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு அந்தப் பட்டம் சாலப் பொருந்தும். அவரை ரசிக்காத ரசிகர்களும் இல்லை. கலைஞர்களும் இல்லை. தமிழ் சினிமாவின் சிம்ம சொப்பனமாக விளங்கிய சிவாஜி நடித்த கேரக்டர்கள் எல்லாமே அற்புதம்தான். அவரது நடிப்பில் அவருக்குப் பிடித்த சில கதாபாத்திரங்கள் உண்டு. அது என்னென்ன என்று அவர் வாயாலேயே சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.  

சிவாஜி நடித்த கதாபாத்திரங்கள்ல உங்கள் மனதைக் கவர்ந்த கதாபாத்திரம் எதுன்னு எந்த சினிமா ரசிகரைக் கேட்டாலும் குறைந்தது 60, 70 படங்களைப் பட்டியலிடுவர். அது ரசிகர்களோட மனநிலை. தான் நடித்த படங்களில் சிவாஜிக்குப் பிடித்த கதாபாத்திரங்கள் எதுவாக இருக்கும்? இதை அவரிடமே கேட்டார் பத்திரிகை நிருபர். நான் நடித்த படங்களில் எனக்குப் பிடித்த கதாபாத்திரம்னா நிறைய படங்களைச் சொல்ல வேண்டி இருக்கும்.

அதுல குறிப்பிட்டு ஒரு 4 பாத்திரங்களை மட்டும் சொல்ல விரும்புறேன். முதல்ல நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது கப்பலோட்டிய தமிழன் படத்தில் நான் ஏற்றிருந்த வஉசி கதாபாத்திரம். அது ஒரு ரியல் லைஃப் கேரக்டர். அதை நான் உள்வாங்கி நடிக்க வேண்டி இருந்தது. வஉசி மகன் சுப்பிரமணியன் பார்த்துவிட்டு திரையில எங்க அப்பாவை அப்படியே நேரில பார்த்தது போல இருந்ததுன்னு சொன்னபோது எனக்கு ஏற்பட்ட திருப்திக்கு அளவே இல்லை என்று சொல்லலாம்.

அதுக்கு அப்புறம் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புற கதாபாத்திரம்னா அது சம்பூர்ண ராமாயணத்தில் நான் ஏற்றிருந்த பரதன் கதாபாத்திரம். மூதறிஞர் ராஜாஜி அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டியபோது, என் ஜென்மமே சாபல்யம் அடைந்ததைப் போல நான் உணர்ந்தேன். அதுக்கு அடுத்து சொல்லணும்னா நீங்கள் எல்லோரும் இன்று வரை பாராட்டிக் கொண்டு இருக்கின்ற அப்பர் கதாபாத்திரம்.

அதுக்கு அப்புறம் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது இன்னொரு முக்கியமான கதாபாத்திரம். அது பாசமலர் படத்தில் நான் ஏற்றிருந்த அந்த அண்ணன் கதாபாத்திரம் என்று ஒரு பத்திரிகை பேட்டியிலே பதிவு செய்து இருக்கிறார் சிவாஜி.  

Tags

From Around the web