சிவாஜிக்கு இணையாக 2வது படத்திலேயே கிடைத்த அனுபவம்... நெகிழ்ந்த சிவக்குமார்!
சிவக்குமாருடைய அந்தப் புகைப்படங்களுக்கும் அவரது திரைவாழ்க்கைக்கும் மிக நெருக்கமான சம்பந்தம் இருக்கிறது. இந்தப் புகைப்படங்களை எடுத்தவர் அவரது நெருங்கிய நண்பர் ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ். இந்தப் புகைப்படங்களைப் பார்த்து விட்டுத் தான் சித்ரா பௌர்ணமி என்ற படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பை சிவக்குமாருக்க வழங்கினார் கிருஷ்ணன் பஞ்சு. அந்தப் படம் சில காரணங்களால் வளரவில்லை. அதே போல தான் ஏவிஎம்.நிறுவனம் காக்கும் கரங்கள் படத்துக்காக புதுமுகத்தைத் தேடிக்கொண்டு இருந்தது. அப்போது சிவக்குமாரை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் கிருஷ்ணன் பஞ்சு.
அந்தப் படத்தில் நடிக்கிறதுக்கு சிவக்குமாருக்கு 1000 ரூபாய் தான் சம்பளம். அந்தப் படத்தைத் தொடர்ந்து மோட்டார் சுந்தரம்பிள்ளை படத்தில் நடிக்கும் வாய்ப்பு சிவக்குமாருக்குக் கிடைத்தது. நடிகர் திலகம் சிவாஜியோடு சிவக்குமார் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். முதல் படத்தில் 1000 ரூபாய் சம்பளம் வாங்கிய அவருக்கு இந்தப் படத்தில் நடிக்க 1500 ரூபாய் சம்பளம். அது தவிர, உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி என்று ஒரு கடிதமும் அவருக்கு வழங்கப்பட்டது. மோட்டார் சுந்தரம்பிள்ளை எனக்கு 2வது படம் என்றபோதும், என்னை ரொம்ப கவுரவமாக ஜெமினி ஸ்டூடியோ நிறுவனத்தினர் நடத்தினர்.
அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் சிவாஜி. கதாநாயகியாக நடித்தவர் சவுகார் ஜானகி. அவங்க ரெண்டு பேரும் நண்பகல் உணவுக்கு ஸ்டார் ஓட்டல்ல தங்களது உணவுகளை எல்லாம் ஆர்டர் பண்ணுவாங்க. அவங்க பெரிய நடிகர்கள். அவங்க ஸ்டார் ஓட்டல்ல ஆர்டர் பண்ணினா ஜெமினி நிறுவனம் வாங்கித் தரும். அது சரி. ஆனால் என்னைப் போன்ற புதுமுகங்கள் ஸ்டார் ஓட்டல்ல உணவை ஆர்டர் பண்ணியபோதும் அதை வாங்கித் தந்த பெருந்தன்மை ஜெமினி நிறுவனத்துக்கு இருந்தது. அதைப் பார்த்து பலமுறை நான் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் சிவக்குமார்.
