அடடே இப்படி ஒரு சாதனை இயக்குனரா? ரஜினி, கமல் எப்படி மிஸ் ஆனாங்க?
தமிழ்சினிமா உலகம், பல சாதனையாளர்களை, பல திறமைசாலிகளைக் கவுரவிக்காமல் விட்டிருக்கிறது. அப்படிப்பட்ட சாதனையாளர்களில் ஒருவர் தான் இயக்குனர் ராமநாராயணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகள் நீங்கலாக போஜ்பூரி, குஜராத்தி மொழி உள்பட ஏறக்குறைய 9 மொழிகளில் 125 திரைப்படங்களை இயக்கியவர் ராமநாராயணன். அந்த சாதனையை இதுவரைக்கும் இந்திய சினிமா உலகிலே யாருமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.
தன்னுடைய தந்தை நடத்திய மருந்து கடையில் வேலை பார்த்த ராமநாராயணன் வேலை பார்த்துக் கொண்டே சினிமா வாய்ப்பைத் தேடினார். இந்த நேரத்தில்தான் சினிமாவுக்கு வாய்ப்பு தேடி வந்த கடையநல்லூரைச் சேர்ந்த காஜாவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ராம் ரஹீம் அப்படிங்கற பேருல பல திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதினார்கள். அதற்குப் பின் ஒரு காலகட்டத்தில் தனித்தனியாக இயங்குவது என்று இருவரும் முடிவெடுத்தனர்.
அதன்பிறகு ஒரு பக்கம் காஜா பல வெற்றிப்படங்களைத் தந்தார். இன்னொரு பக்கம் ராமநாராயணன் ஏராளமான வெற்றிப்படங்களை இயக்கினார். ராமநாராயணன் இயக்கிய பல படங்களில் செலவு குறைவாகவும், லாபம் பெரியதாகவும் இருந்ததால பல தயாரிப்பாளர்கள் அவருடைய இயக்கத்தில் படமெடுக்க ஆசைப்பட்டார்கள்.
அதுவும் துர்கா என்ற படத்தின் வெற்றிக்குப் பின்னால் அவரைத் தேடி பல வாய்ப்புகள் வந்தன. இந்தப் படம் தமிழில் மாபெரும் வெற்றி அடைந்தது. அதனால் 8 இந்திய மொழிகளில் அந்தப் படம் தயாரிக்கப்பட்டது. விஜயகாந்த், சத்யராஜ், மோகன் உள்பட பல கதாநாயகர்களோடு ராமநாராயணன் இணைந்து பணியாற்றினார். என்றாலும், தமிழ்சினிமாவின் முக்கிய 2 கதாநாயகர்களான ரஜினி, கமல் இருவரும் அவருடைய படங்கள்ல நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
