சினிமாவுக்காக ரெயில்வே வேலையை உதறிய நடிகர்... வாலியிடம் சவால்... அட அவரா?

 
vaali

கவிஞர் வாலி தமிழ்சினிமாவிலே பாட்டெழுத வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டு இருந்த காலகட்டத்திலே அவரை ஒரு பாடலாசிரியராக ஆக்கி விட வேண்டும் என்று முழு மூச்சாகப் பாடுபட்டவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். அவர் கதாநாயகனாக நடித்த ஒரு திரைப்படம் தான் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் உருவான தாமரைக்குளம் என்ற படம். அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு வி.கோபாலகிருஷ்ணனுடன் வாலி சென்றபோது, அந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டு இருந்த ஒரு நடிகரை அவர் சந்திக்க நேர்ந்தது.

மிஸ்டர் வாலி. என் ஊர் தாராபுரம். என் பேரு குண்டுராவ் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார் அந்த நடிகர். அது மட்டுமல்லாமல் வாலிகிட்ட தன்னோட பிரச்சனைகளைப் பற்றி எல்லாம் பேசத் தொடங்கினார். நான் ரெயில்வே டிப்பார்ட்மெண்ட்ல வேலை செய்றேன். கை நிறைய சம்பளம். ஆனாலும் என்னோட மனசெல்லாம் பார்த்தீங்கன்னா சினிமா மேல தான் இருக்கு. இன்னும் சரியா சொல்லணும்னா எனக்கு சினிமா மேல அப்படி ஒரு பைத்தியம்.

இப்ப சென்னையில பல நாடகங்கள்ல நான் நடிச்சிட்டு இருக்கேன். அதைப் பார்த்துட்டுத்தான் இந்த தாமரைக்குளம் படத்தில் நடிக்கிறதுக்கு என்னைக் கூப்பிட்டாங்க. இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு எனக்கு 90 ரூபாய் சம்பளம். சம்பளத்தொகையைக் கேட்ட உடனே எனக்கு ஆச்சரியமாப் போயிடுச்சு. இனிமே சினிமாதான் எனக்கு வாழ்க்கை அப்படின்னு முடிவு செஞ்சி ரெயில்வே வேலையை நான் ராஜினாமா பண்ணிட்டேன் என்று வாலிகிட்ட அந்த நடிகர் சொன்னபோது அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. ரெயில்வேல வேலை கிடைக்குறது எல்லாம் அவ்ளோ சுலபமா?

ரெயில்வேல வேலை பார்த்துக்கிட்டே நீ சினிமாவில நடிக்க முயற்சி செய்யக்கூடாதா? இப்படி பண்ணிட்டீங்களேன்னு வாலி அந்த நடிகரிடம் ஆதங்கத்தைத் தெரிவித்தார். நிச்சயமா, இந்த சினிமா இன்டஸ்ட்ரில நான் மிகப்பெரிய ஸ்டார் ஆவேன்கற நம்பிக்கை எனக்கு இருக்கு வாலி. அப்ப எனக்காக இந்த ரெயில் காத்து நிற்கும்னு உறுதியாக சொன்னார் அந்த நடிகர்.

அவரது அசாதாரணமான அந்த நம்பிக்கையை ஆச்சரியத்தோடு பார்த்தார் வாலி. ஆனா ஒரு காலகட்டத்துல அந்த நடிகரோட நம்பிக்கை நிஜமானதுங்கறதுதான் உண்மை. வாலிக்கிட்ட தன்னம்பிக்கையோடு பேசிய அந்த குண்டுராவ் வேற யாருமில்லை. தமிழ்சினிமா உலகை பல ஆண்டுகாலம் தன்னோட கைக்குள் வைத்து இருந்த நாகேஷ் தான் அந்த குண்டுராவ். 

Tags

From Around the web