மூன்றாம்பிறை படம் தாக்கத்தை ஏற்படுத்தியதா? தயாரிப்பாளர் சொன்ன அசத்தல் பதில்

 
Moondram pirai

80களில் பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான மூன்றாம்பிறை படம் காலத்தால் அழியாத காவியம் என்று சொன்னால் மிகையில்லை. அந்தப் படத்தில் கமலும், ஸ்ரீதேவியும் போட்டிப் போட்டு நடித்து இருப்பார்கள். தேசிய விருது பெற்ற படம். கமல் கிளைமாக்ஸ் காட்சியில் நடிப்பின் உச்சத்தைத் தொட்டு இருந்தார். கவியரசர் கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல் இந்தப் படத்தில் தான் இடம்பெற்றது.

கண்ணே கலைமானே என்ற அந்தப் பாடலை கே.ஜே.யேசுதாஸ் மிக அற்புதமாகப் பாடி நம்மைத் தாலாட்டி இருப்பார். அப்பேர்ப்பட்ட படம் ரசிகர்கள் மத்தியில் இன்று வரை பெரிய தாக்கத்தைத் தான் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்திரை உலகில் மட்டும் அல்ல. இந்தியத் திரை உலகிலும் இந்தப்படம் ஒரு மைல் கல் தான். அந்தப் படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் இதே கேள்வியை எழுப்பினார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். 

ஒரு படத்தைப் பார்த்து முடித்த பின்னாலே குறைந்தது 2 அல்லது 3 மணி நேரமாவது சிந்திக்கத் தூண்டுகிற விதத்தில் அந்தப் படத்தின் கதை அம்சம் அமையணும். அப்படி அமைந்த திரைப்படமாகத் தான் மூன்றாம்பிறை படத்தை நான் பார்க்கிறேன். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு யாரும் வீட்டுல போய் நிம்மதியா படுத்துற முடியாது. அந்தப் படத்தைப் பற்றிய சிந்தனையே அவங்க மனசுல ஓடிக்கொண்டு இருக்கும். அப்படி நம் மனதை வருடக்கூடிய வகையிலே உணர்ச்சிப்பூர்வமான காவியமாக பாலுமகேந்திரா அந்தப் படத்தை படைத்து இருந்தார் என்றார் சித்ரா லட்சுமணன். 

Tags

From Around the web