பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பெண்கள்... ஒரே பதிவில் வாயடைத்த வாலி!
வாலிபக்கவிஞர் என்று கவிஞர் வாலியை அழைக்க காரணம் அவரது பாடலில் அந்த விஷயம் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். இது மாதர் சங்கத்தினரையும் உசுப்பி எழச் செய்தது. அதனால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார் வாலி. வாங்க என்ன விவரம்னு பார்க்கலாம்.
ஒரு காலகட்டத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் திரைப்படப்பாடல்களில் பெண்கள் என்ற தலைப்பிலே ஒரு கருத்தரங்கத்தை நடத்தினர். அதில் கவிஞர் வாலி இயற்றிய பல பாடல்கள் கடுமையான விமர்சனத்துக்கு ஆளாயின. அவற்றுக்கு எல்லாம் கவிஞர் வாலி ஒரு கட்டுரையில் அழகாகப் பதில் சொல்லி இருந்தார். பெண்ணால் பிறந்து பெண்ணுடன் வாழ்ந்து பெண்ணை ஈன்றெடுக்கும் எந்த ஆண்மகனும் தற்கால சமூகத்தில் பெண்ணைக் கொச்சைப்படுத்தி பேசவோ, எழுதவோ மாட்டான். படப்பாடல்கள் பாடலாசிரியர்களின் கருத்து அல்ல என்பதை முதலிலே புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு படப்பாடல் படத்தின் கதாநாயகனோ, கதாநாயகியோ தாங்கி நிற்கும் கருத்தை வெளிப்படுத்துகிறதே தவிர, படைப்பாளியின் கருத்தை வெளிப்படுத்துவதில்லை. மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும். அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் என்ற பாடலை என்னுடைய கருத்தாக ஏற்றுக் கொண்டு இருந்தால், மக்கள் பெரிய அளவிலே குழம்பிப் போயிருப்பார்கள். எந்த மூன்றெழுத்தை நான் சொல்ல வருகிறேன் என்பது அவர்களது சிந்தையை சல்லடை கண்களால் துளைத்துவிடும்.
அது கதாபாத்திரத்தின் கருத்து. அதுவும் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்த எம்ஜிஆரின் இமேஜை சார்ந்த கருத்து என்பது மக்களுக்குத் தெளிவாகவே புரிந்து இருந்தது. அதனால் தான் மூன்றெழுத்து என்று எம்ஜிஆர் குறிப்பிடுவது திமுக என்று உணரப்பட்டு கொட்டகையில் கரவொலி எழும்ப காரணமாக அமைந்தது. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார் என்ற பாடலை என்னுடைய கருத்தாக மக்கள் ஏற்றுக் கொண்டு இருந்தால் நான் நகைப்புக்கு உரியவனாக இருப்பேன்.
அந்த வரிகளை நான் எம்ஜிஆர் உதடுகளில் உட்கார்த்தி வைத்தேன். அப்படி ஆணையிடவும், அதை நடத்திக் காட்டவும் அவருக்கு அருகதையும், ஆற்றலும் உள்ளதாக மக்கள் எண்ணியதின் விளைவே அந்தப் பாடலுக்கு பெருமை சேர்த்தது. கனியன் பூங்குன்றனார் பாடிய தீதும் நன்றும் பிறர்தர வாரா என்ற மந்திர வாக்கியத்தை மாதர் சங்கத்தினர் மனனம் செய்வது நல்லது என்று அந்தக் கட்டுரையிலே குறிப்பிட்டுள்ளார் கவிஞர் வாலி.
