உங்க படம்தான் ஹிட்!.. விஜயகாந்துக்கு போன் போட்டு சொன்ன ரஜினி!.. ஒரு பிளாஷ்பேக்...
சினிமாவில் நடிக்கும் ஆசையில் மதுரையிலிருந்து இருந்து சென்னைக்கு வந்து வாய்ப்புகள் தேடி பல அவமானங்களை சந்தித்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவர் விஜயகாந்த்.
எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய சட்டம் என் கையில் திரைப்படம் விஜயகாந்துக்கு முக்கிய படமாக அமைந்தது. அதன்பின் சில படங்கள் ஓடவில்லை என்றாலும் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் விஜயகாந்த்.
விஜயகாந்த் சினிமாவில் நடிக்க தொடங்கிய போது ரஜினி பிரபலமான நடிகராக இருந்தார். ஆனாலும் ஒரு கட்டத்தில் ரஜினி படங்களுக்கு டஃப் கொடுக்கும் நடிகராக விஜயகாந்த் மாறினார். அதற்கு காரணம் கிராமப்புறங்களில் விஜயகாந்துக்கு அதிக ரசிகர்கள் இருந்தார்கள். பல நேரங்களில் ரஜினி, விஜயகாந்த் படங்கள் ஒன்றாக வெளியாகி ரஜினி படத்தை விட விஜயகாந்தின் படம் அதிக வசூலை பெற்றது.

1992ம் வருடம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி விஜயகாந்தின் சின்னக்கவுண்டர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஆர்.வி.உதயகுமார் இயக்கியிருந்தார். அதேபோல் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த மன்னன் திரைப்படமும் இதே தேதியில் வெளியானது. அதில் சின்ன கவுண்டர் படம் அதிக வசூலை பெற்றதாக சொல்லப்பட்டது.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய ஆர்.வி உதயகுமார் ‘மன்னன் படமும், சின்னக்கவுண்டர் படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆன நேரம்.. ரஜினி விஜயகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘வாழ்த்துக்கள் விஜி.. உங்க படம் சின்னக் கவுண்டர்தான் பொங்கல் வின்னர்’ எனக் கூறினார். ஆனால் விஜயகாந்த் அதை ஏற்கவில்லை.. ‘இல்ல சார் எப்பவும் போல உங்க படம்தான் நம்பர் ஒன்ல போயிட்டிருக்கு’ என பெருந்தன்மையாக மறுத்துவிட்டார்’ என கூறியிருக்கிறார்.
