எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும்... சில்க் ஸ்மிதா குறித்து நெகிழ்ந்த விணு சக்கரவர்த்தி!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகை  சில்க் ஸ்மிதா
 
silk smitha

தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடிகை  சில்க் ஸ்மிதா.    அவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் நடிகரும், கதாசிரியருமான வினு சக்கரவர்த்தி சில்க் ஸ்மிதாவுக்கும் தனக்கும் இடையே இருந்த உறவு குறித்து வினு சக்கரவர்த்தி ஒருமுறை மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசிய சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர்  விஜயலட்சுமி . ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த காலகட்டத்தில் வினு சக்கரவர்த்தியின் கண்ணில் பட்டார்
அவரிடம் இருந்த திரைத்தோற்றத்தையும் திறமையையும் கவனித்த வினு சக்கரவர்த்தி, அவரை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சி எடுத்தார். நடிப்பு, தமிழ் உச்சரிப்பு உள்ளிட்ட விஷயங்களிலும் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் வினு சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

 1980-ஆம் ஆண்டு வெளியான வண்டிச்சக்கரம்  திரைப்படம் சில்க் ஸ்மிதாவின் திரைப்பயணத்தை தொடங்கி வைத்தது. விணு சக்கரவர்த்தி கதை எழுதிய இந்தப் படத்தை கே.விஜயன் இயக்கியிருந்தார். சிவகுமார், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் விஜயலட்சுமி சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பிறகே அவரது பெயருடன்  சில்க்  இணைந்து,  சில்க் ஸ்மிதா  என்ற பெயரில் திரையுலகில் பிரபலமானார்.

வண்டிச்சக்கரம் படத்திற்குப் பிறகு சில்க் ஸ்மிதாவுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். கவர்ச்சி நடிகை என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது திரை ஆளுமை மற்றும் நடிப்பாலும் சில படங்களில் முத்திரை பதித்தார். குறுகிய காலத்திலேயே ஏராளமான திரைப்படங்களில் நடித்த சில்க் ஸ்மிதா, இந்திய சினிமாவில் இன்றும் நினைவுகூரப்படும் நடிகையாக இருக்கிறார்.

ஒருமுறை ஜெர்மனியில் நடைபெற்ற கலைவிழா ஒன்றில் வினு சக்கரவர்த்தி கலந்துகொண்டிருந்தாராம். அப்போது அவரிடம் சில்க் ஸ்மிதாவுடனான உறவு குறித்து அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 நீங்களும் சில்க் ஸ்மிதாவும் தனியாக ஒரே அறையில் இருந்தால், உங்களுக்குள் எப்படிப்பட்ட உறவு இருக்கும்?  என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வினு சக்கரவர்த்தி,  ஒரு ஆசிரியருக்கும் அவருடைய மாணவிக்கும் இடையே எப்படிப்பட்ட உறவு இருக்குமோ, அதுதான் எங்களுக்குள் இருக்கும்  என்று கூறினாராம்.

அதோடு நிறுத்தாமல் சில்க் ஸ்மிதா மீது தனக்கு இருந்த அன்பையும் அவர் மிகவும் உருக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். எனக்கும் சில்க்குக்கும் அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், அவள் எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்  என்று வினு சக்கரவர்த்தி நெகிழ்ச்சியுடன் கூறிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
 

Tags

From Around the web