கோடை விடுமுறையை குறி வைக்கும் விஷால்
நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர் நடிகர் விஷால். இயக்குனராக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் 'செல்லமே' படத்தின்மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் வெற்றி பெற்றதால் தொடர்ந்து நடிகராகவே ஜொலித்து வருகிறார்.
நடிகராக மட்டுமே இருந்துவந்த இவர் கடந்த 2013ல் 'பாண்டிநாடு' படத்தின்மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்திவரும் இவர் இதுவரை அவர் நடிக்கும் படங்களை மட்டுமே தயாரித்து வருகிறார்.
கடந்த 2017ல் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்தார். இப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன் துப்பறிவாளன் 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை தொடங்கினர். இதற்கிடையே விஷாலுக்கும், மிஷ்கினுக்கு பிரச்சனை ஏற்பட்டு இப்படத்திலிருந்து விலகினார் மிஷ்கின்.
இதையடுத்து விஷாலே இப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார். அறிவிப்பு வெளியாகியும் படப்பிடிப்பு நீண்ட நாளாக தொடங்காமலே உள்ளது. இந்நிலையில், அடுத்தமாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மூன்று மாதத்தில் படப்பிடிப்பை முடித்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளார்களாம்.