திருச்சிற்றம்பலம் பயங்கரமான மாஸ் படம்... எப்படி? தனுஷ் சொன்ன புதுவிளக்கம்
ஒன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு உற்சாகத்துடன் தமிழ்சினிமாவில் களம் கண்டு இருக்கிறார் நடிகர் தனுஷ். இதனால் ரசிகர்கள் மத்தியில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சிற்றம்பலம். டைட்டிலே ஒரு பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்தப்படத்தின் ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் நடந்தது. அதில் தனுஷ் பேசிய வார்த்தைகளில் இருந்து சில உங்கள் பார்வைக்கு...!
ஒரு ஹீரோ பத்து பேரை அடிச்சிட்டு கெத்தா நின்னா மாஸ். இல்ல ஒரு ஹீரோ செஞ்சிருவேன்னு பஞ்ச் டயலாக் பேசிட்டு ஸ்டைலா நடந்து போனா அது மாஸ். இல்ல கடைசி நேரத்துல ஆபத்துல இருந்து காப்பாத்துனா அது மாஸ்.
ஆனா இதெல்லாம் தாண்டி ஒரு மாஸ் இருக்கு. நாம குழந்தையா இருக்கும்போது நம்மள வளர்க்குற அப்பா அம்மா அவங்க வயசானதுக்கு அப்புறம் அவங்க குழந்தையா ஆயிடுறாங்க. அவங்கள நல்லபடியா குழந்தையா நினைச்சு பாத்துக்கிட்டா அது மாஸ். கடைசி வரைக்கும் செஞ்ச நன்றிய மறக்காம இருந்தா அது மாஸ். நம்ம மேல தப்புல்லன்னா கூட ஒரு சிட்டியுவேஷன்ஸ் சரியா இருந்து இறங்கி வந்து மன்னிப்பு கேட்டா அது மாஸ்.
நம்ம பிரண்டு ஹெல்ப்னு கேட்கும்போது கைல பத்து பைசா இல்லன்னாலும் கூட கழுத்துல கிடக்குற செயின கழட்டி அடமானம் வச்சி அந்தக் காச பிரண்டுக்கிட்ட கொடுத்தா அது மாஸ். அப்படிப் பார்த்தா திருச்சிற்றம்பலம் ஒரு பயங்கரமான மாஸ் படம் தான்.
இந்தப்படத்தோட டைரக்டர் ஜவஹர். அவரே சொல்லிட்டாரு. அவர் என்னோட அண்ணாவோட பிரண்டாதான் தெரியும். அவர் கூட நான் ரெண்டு மூணு படங்கள் பண்ணியிருக்கேன். இறைவன் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விஷயத்தை அள்ளிக் கொடுப்பான். அந்த மனுஷனுக்குத் தங்கமான மனசை அள்ளிக் கொடுத்திருக்கான்.
ஒரு நல்ல மனுஷன் கூட வேலை செஞ்சோம் அப்படிங்கறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். என்னுடைய டார்லிங். என்னுடைய செல்லப்பிள்ளை. என்னுடைய பாரதிராஜா சார். பாரதி ராஜா. அப்படிங்கறது வெறும் பெயரா? அது உலகத்தமிழர்களின் அடையாளக்குரல். இன்னைக்கும் அவர் ஸ்டேஜ்ல ஏறி என் இனிய தமிழ் மக்களே (மிமிக்ரியில்) அப்படின்னா உலகத்துல இருக்குற ஒவ்வொரு தமிழனோட கையும் தன்னையறியாமல் தானாத் தட்டும்.
ஆளு தான் கொஞ்சம் பார்க்க கரடுமுரடா இருப்பாரு. ஆனா அது ஒரு குழந்தை. உங்கக்கூட பழகுனதுல வேலை செஞ்சதுல உங்களத் தெரிஞ்சிக்கிட்டதுல நான் ரொம்ப கர்வப்படறேன். ரொம்ப சந்தோஷப்படறேன். ஐ லவ் யூ சார். பிரகாஷ்ராஜ் தோள்பட்டையில் அடிபட்டும் கூட படத்தில் நடிக்க வந்தது எனக்கு நெகிழ்ச்சியைக் கொடுத்தது.
அனிருத். 10 வருஷத்துல நீங்க பெரிய மியூசிக் டைரக்டரா இருப்படான்னு சொன்னேன். இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
இது ஒரு அப்பா பையனுக்கான படம். பொதுவா நான் எங்க அம்மாவைப் பத்தி நிறைய பேசிருக்கேன். அப்பாவைப் பத்தி பேசுனது கிடையாது. இந்த இடத்துல இந்த மேடையில இந்தப்படத்துக்காக பேசுனா கரெக்டா இருக்கும்னு தோணுது. இந்தப்படம் முழுக்க என் அப்பா பத்தியும் நான் எப்படிப்பட்ட அப்பாவா இருக்கணும்னு நினைச்சிக்கிட்டு தான் இந்தப்படத்துல நடிச்சேன்.
ஒருத்தன் ஒரு குக்கிராமத்துல இருந்து பொழப்பைத் தேடி மெட்ராஸ்க்கு வர்றான். அவனுக்கு நாலு குழந்தைங்க. வந்த இடத்துல ஒரே பசி பட்டினி பஞ்சம். போராடுறான்.....போராடுறான்...அவன் மனைவி மட்டும் தான் அவனுக்கு ஒரே சப்போர்ட். வறுமை...வறுமை...கஷ்டம்...கஷ்டம்..இவ்வளவும் அனுபவிச்சி எல்லாம் எதுக்கு ஒரு வேளை சாப்பாடு எப்படியாவது இந்த நாலு குழந்தைங்களுக்கும் கொடுத்துடணும்னு.
இவ்ளோ கஷ்டப்பட்டு நடையா நடையா நடந்து ஒரு ரூபா 50 காசு மிச்சம்பண்றதுக்கு நடையா நடந்து கால்ல ஓட்ட விழுந்து அந்த அழுக்கு சினிமாவுல ஒரு வாய்ப்பு கிடைக்குது. இந்த வாய்ப்புல சினிமாவுல நான் எங்கப் போய் சேரணும் அப்படிங்கறத யோசிக்காம இந்த வாய்ப்பின் மூலமா என் நாலு குழந்தைங்களுக்கு எப்படி சாப்பாடு போடணும்...அவங்கள எப்படி படிக்க வைக்கணும்? அவங்கள எப்படி இந்த சொசைட்டில நல்ல ஆளா ஆக்கணும்?
அப்படின்னு தன்னுடைய கனவுகளை எல்லாமே அவன் பொசுக்கிக்கிறான். அந்தப் பொசுங்குன புகையில இருந்து வந்த அந்த நாலு குழந்தைங்கள்ல மூத்த மகன் ஒரு எஞ்சினீயர் பிறகு டைரக்டர். அதுக்கு அப்புறம் உள்ள ரெண்டு பெண்குழந்தைகளும் டாக்டர்ஸ். அந்த நாலாவது பையன்......அப்பா நான் ஹீரோ ஆகணும்கறதுக்காக ரோடு ரோடா நடுராத்திரி வண்டில 5000க்கும், 10ஆயிரத்துக்கும் வட்டிக்குக் கடன் வாங்குனதை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் மறக்க மாட்டேன். யு ஆர் மை ஹீரோ.
நம்முடைய காதல், சோகம், வீரம், பிரச்சனை, சந்தோஷம் எல்லாத்தையும் திரையில பார்க்க முடியற படமா திருச்சிற்றம்பலம் இருக்கும்னு நான் நம்புறேன்.