“தமிழ் சினிமாவை கெடுப்பதே இவர்கள்தான்”… தாணுவை வெளுத்து வாங்கிய பிரபல திரையரங்கு உரிமையாளர்…
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் “நானே வருவேன்”. இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இத்திரைப்படம் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய நாள் வெளியானது.
ஆதலால் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்கு போட்டியாக இத்திரைப்படத்தை தாணு வெளியிடுகிறார் என பேச்சுக்கள் அடிபட்டன. மேலும் பல பேட்டிகளில் தாணு இதனை மறுத்தும் வந்தார்.
இதனை தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு, “நானே வருவேன் திரைப்படம் தஞ்சாவூரில் மட்டுமே 50 லட்சம் வசூல் ஆகியிருக்கிறது” என கூறினார். இந்த நிலையில் இது குறித்து திரையரங்கு உரிமையாளரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் விமர்சித்து கூறியுள்ளார்.
அவர் கூறியது பின்வருமாறு…
“நானே வருவேன் திரைப்படம் மிகவும் குறைந்த வசூலையே பெற்றது. ஆனால் தாணு, தஞ்சாவூரில் மட்டும் 50 லட்சம் பங்கு வருவதாக கூறுகிறார். இதெல்லாம் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது. தஞ்சாவூர், திருச்சி பகுதிகளில் மொத்தமாகவே ஒரு கோடிதான் வசூல் ஆகும். ஆனால் தஞ்சாவூரில் மட்டுமே 50 லட்சம் வசூல் என தாணு கூறுகிறார்.
யாரை திருப்திப்படுத்த இது போல் தாணு கூறுகிறார் என தெரியவில்லை. இது போன்ற ஆட்கள்தான் தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை கெடுக்கிறார்கள். வசூல் ஆகாத திரைப்படத்தை அதிக வசூல் ஆகியிருப்பதாக கூறி 10 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு 30 கோடி சம்பளம் வாங்கும் எண்ணத்தை தூண்டிவிடுகிறார்கள். அதன் பிறகு நடிகர்கள் சம்பளம் அதிகமாக கேட்கிறார்கள் என புலம்புகிறார்கள்.
ஒரு திரைப்படம் தோல்வியடைந்துவிட்டால், அத்திரைப்படம் தோல்வி என்று உண்மையை கூறிவிடவேண்டும். அப்படி கூறினால்தான் சம்பந்தப்பட்ட நடிகர்கள் அவர்களது சம்பளத்தை குறைக்க யோசிப்பார்கள். ஆனால் படம் வெற்றிப்படம் என்று நடிகர்களை திருப்திப்படுத்துவதாக நினைத்து கூறினீர்கள் என்றால் நடிகர்கள் தங்களது சம்பளத்தை உயர்த்தத்தான் செய்வார்கள்.
நானே வருவேன் திரைப்படம் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் பாதி வசூலை கூட பெறவில்லை. தாணுவின் இது போன்ற செயல்கள் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுச்செல்லாது. மாறாக பின்னோக்கித்தான் செல்லவைக்கும்” என அப்பேட்டியில் திருப்பூர் சுப்பிரமணியம் தாணுவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.