“சினிமாவில் ரெண்டே ஜாதிக்காரங்கதான் இருக்காங்க…” ஓப்பனாக போட்டு உடைத்த பிரபல விநியோகஸ்தர்…
தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கங்கள் தொடங்கியது முதலே அதன் தாக்கம் சினிமாவில் பிரதிபலிக்கத் தொடங்கியது. “பராசக்தி”, “இரத்த கண்ணீர்” என பல திரைப்படங்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
அதே போல் ஜாதி குறித்த உரையடல்களை நிகழ்த்துவது போலவும் பல திரைப்படங்கள் வெளிவந்தன. இது ஒரு பக்கம் என்றாலும் ஜாதி ஆதிக்கத்தை நியாயப்படுத்தும் பல திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் வெளிவந்துகொண்டுதான் இருந்தது.
எனினும் சமீபத்தில் பா.ரஞ்சித், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் சமூக நிதி, சாதிய ஏற்றத்தாழ்வை மையமாக வைத்து திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.
அப்போது நிருபர் “பிரின்ஸ்”, “வாரிசு” போன்ற திரைப்படங்களை சுட்டிக்காட்டி “தமிழ் நடிகர்கள் தெலுங்கு இயக்குனர்களை நோக்கிச் செல்கிறார்களே. இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என திருப்பூர் சுப்பிரமணியமிடம் கேட்டார்.
அதற்கு திருப்பூர் சுப்பிரமணியம் “நாம் அப்படி கூறமுடியாது. லிங்குசாமி தெலுங்கில் படம் இயக்கியுள்ளார். முருகதாஸ் ஹிந்தியில் படம் இயக்கியுள்ளார். சினிமாவுக்கு மொழி, ஜாதி போன்ற விஷயங்கள் கிடையாது.
இவ்வாறு சினிமா உலகில் மொழி, ஜாதி போன்ற விஷயங்களை பார்ப்பவர்கள் எனக்கு தெரிந்து இல்லை. சினிமாவை பொறுத்தவரை இரண்டே ஜாதிகள்தான். பணம் இருப்பவர் ஒரு ஜாதி. பணம் இல்லாதவர் ஒரு ஜாதி. பணம் இருப்பவருக்கு மரியாதை கொடுப்பார்கள். பணம் இல்லாதவர்களுக்கு மரியாதை கொடுக்கமாட்டார்கள்” என கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் “ஆனால் சமீபத்தில் நான்கு அல்லது ஐந்து வருடங்களாக சில இயக்குனர்கள் ஜாதி குறித்து படம் எடுக்கிறார்கள். நான் அவர்களுக்கு வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், தயவுசெய்து சினிமாவிற்குள் ஜாதியை புகுத்தாதீர்கள் என்பதுதான்” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.