10000 திரை இசைப்பாடல்கள், 2500 பக்திப்பாடல்கள், கதாநாயகன் அவதாரம்...யார் இந்த மதுரைக்காரர்?
எம்ஜிஆர் திரையில் தோன்றினால் அவர் பாடியதைப் போன்றே பாடல் அமைந்திருக்கும். சிவாஜி என்றால் அவருக்காகவே அமைந்திருக்கும் குரல்.
அதே போல தான் முத்துராமன், எஸ்எஸ்ஆர், ரவிச்சந்திரன், ஜெய்சங்கர் ஆகியோரது படங்களிலும் அந்தந்நத ஹீரோவே ஒரிஜினல் வாய்சில் பாடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் அந்தப் பாடல். அதெப்படி யாருமே செய்யாத இந்தப் புதுமை...பின்னாளில் எஸ்பிபி யின் குரலும் இதே போல் பொருந்தியது.
இந்த மந்திரக்குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்று பார்த்தால் வெண்கலக்குரலோன் என்று அழைக்கப்படும் டிஎம்எஸ் தான் அவர்.
முதல் பாடல் எது என்று கேட்டால், கிருஷ்ணவிஜயம் படத்தில் இடம்பெற்ற ராதே நீ என்னை விட்டுப் போகாதடி என்ற பாடல் தான். இது 1950ல் வெளியானது. இவரது கடைசி பாடல் செம்மொழியான தமிழ்மொழியாம் என்ற பாடல். இது 2010ல் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக உருவானது.
இவர் 24.3.1923ல் மதுரையில் பிறந்தார். பட்டினத்தார், அருணகிரிநாதர் என்ற இருபடங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார். பத்மஸ்ரீ, கலைமாமணி உள்பட பல விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.
சினிமாவில் எம்ஜிஆருடனான தொடர்பு குறித்து டிஎம்எஸ் இவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்.
1942ல் மதுரையில் எம்ஜிஆரை சந்தித்தேன். சினிமாவில் பாட சான்ஸ் வாங்கித்தருமாறு கேட்டேன். அந்தக்கனவு 1952ல் நிறைவேறியது. கூண்டுக்கிளி படத்தில் சிவாஜிக்காக ஒரு பாடலைப் பாடினேன். முதல் பாடலே சரியா- தப்பா? என்று தான் ஆரம்பித்தது.
பின்னர் மலைக்கள்ளன் பட வாய்ப்பு கிடைத்தது. தமிழன் என்றொரு இனமுண்டு, எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ஆகிய பாடல்களைப் பாடினேன்.
வள்ளல் என்பதால் வாரி வழங்குவதாக எம்ஜிஆரை எல்லோரும் சொல்கிறார்கள். இது தவறு. எத்தனை வள்ளல்கள் இப்படி வாரி வழங்கி உள்ளார்கள்? சுயநலம் மேலோங்கியவர்களிடம் அருள் தங்கவே தங்காது. ஓடிவிடும். எம்ஜிஆர் இரவும், பகலும் பொதுநலத்தையே சிந்தித்தார். அதனால் அருள் அவரை ஆறத்தழுவியது.