Cinema History
கோபத்தில் அனலாய் கொந்தளித்த டி.எம்.எஸ்… வீட்டிற்கே சென்று காலில் விழுந்த எம்.எஸ்.வி…
1974 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர், லதா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “சிரித்து வாழ வேண்டும்”. இத்திரைப்படத்தை எஸ்.எஸ்.பாலன் இயக்கியிருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த ஐந்து பாடல்களும் மிகப் பிரபலமான பாடல்களாக அமைந்தன. குறிப்பாக “மேரா நாம் அப்துல் ரஹ்மான்” என்ற பாடல் காலத்தை தாண்டியும் ரசிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த பாடல் பதிவின்போது இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், பாடகர் டி.எம்.சௌந்தரராஜனுக்கு நிகழ்ந்த மோதல் குறித்த ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இருவருக்கும் இடையே அப்படி என்ன மோதல் வந்தது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒன் மோர்…
“மேரா நாம் அப்துல் ரஹ்மான்” பாடலை டி.எம்.எஸ் பாடினால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணிய எம்.எஸ்.வி, அவரை ரெக்கார்டிங் ஸ்டூடியோவுக்கு அழைத்தார். டி.எம்.சௌந்தரராஜன் பாடத்தொடங்கினார். அவர் பாடியது எம்.எஸ்.விக்கு திருப்தியாக இல்லை. ஆதலால் ஒன் மோர் கேட்டார்.
அதனை தொடர்ந்து மீண்டும் பாடினார் டி.எம்.எஸ். இப்போதும் எம்.எஸ்.விக்கு திருப்தியாக இல்லை. ஆதலால் இரண்டாவது முறையாக ஒன் மோர் கேட்டார். அதன் பின் டி.எம்.எஸ். மீண்டும் பாடினார். அப்போதும் எம்.எஸ்.விக்கு திருப்தியாக இல்லை. மூன்றாவது முறையாக ஒன் மோர் கேட்டார். இவ்வாறு தொடர்ந்து ஒன் மோர் கேட்க, டி.எம்.எஸ் மீண்டும் மீண்டும் பாடினார். கிட்டத்தட்ட 7 முறை டி.எம்.எஸ் பாடியபிறகும் எம்.எஸ்.விக்கு திருப்தியாக இல்லை. ஆதலால் 8 ஆவது முறை எம்.எஸ்.வி ஒன் மோர் கேட்டார்.
கோபத்தில் கொந்தளித்த டி.எம்.எஸ்…
ஆனால் இந்த முறை டி.எம்.எஸ் பாடவில்லை. மைக் இருக்கும் அறையை விட்டு வெளியே வந்து “கோவில்ல சுண்டலுக்கு பாட்டு பாடி பிழைத்தாலும் பிழைப்பேனே தவிர, இனிமே உனக்கு பாடமாட்டேன்” என கோபத்தில் கத்திவிட்டு ஸ்டூடியோவில் இருந்து வீட்டிற்கு போய்விட்டாராம்.
அந்த காலகட்டத்தில் எம்.எஸ்.வி உச்சத்தை தொட்டிருந்த இசையமைப்பாளராக திகழ்ந்து வந்தார். ஆனால் டி.எம்.எஸ் பிரபலமான பாடகராக அப்போதுதான் வளர்ந்திருந்தார். எனினும் எம்.எஸ்.வி வேறு ஒரு பாடகரை தேர்வு செய்யவில்லை.
காலில் விழுந்த எம்.எஸ்.வி…
அடுத்த சில நிமிடங்களில் எம்.எஸ்.வி, டி.எம்.எஸ்ஸின் வீட்டிற்கே சென்றுவிட்டார். அங்கே அவரது காலில் விழுந்தாராம் எம்.எஸ்.வி. மேலும், “உங்களை விட்டா இந்த பாட்டை வேறு யாராலும் பாட முடியாது. நீங்கதான் பாடமுடியும். நான் எந்த மாதிரி நினைத்திருந்தேனா அது போல் நீங்கள் பாடியது வரவில்லை என்பதனால்தான் ஒன் மோர் கேட்டேனே தவிர உங்களை குறை சொல்லவேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை. திரும்ப ஸ்டூடியோவுக்கு வாங்க. நிச்சயமா உங்களால் சிறப்பாக பாடமுடியும்” என்று கூறி சமாதனப்படுத்தி அவரை மீண்டும் அழைத்து வந்து பாட வைத்திருக்கிறார் எம்.எஸ்.வி.