சைக்கிள்ள போய் வாய்ப்பு கேட்டேன்: அந்த படம்தான் என் வாழ்க்கையை மாத்துச்சி; உருகிய டி.எம்.எஸ்

by சிவா |   ( Updated:2023-05-22 11:22:34  )
tms
X

திரையுலகில் நடிக்க ஆசைப்பட்டு வந்தவர் டி.எம்.சவுந்தரராஜன். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். ஆனால், அவரின் குரல்வளம் அவரை பாடகராக மாற்றியது. 1950ம் வருடம் முதல் இவர் சினிமாவில் பாட துவங்கினார். 1972 வருடம் வரை இவர் திரைப்படங்களில் பலநூறு பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு இவர் பாடிய பாடல்கள் எல்லாம் காலத்தை தாண்டி நிலைத்து நிற்பவை ஆகும்.

எம்.ஜி.ஆருக்கு ஒரு மாதிரியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் குரலை மாற்றி பாடி அசத்தியவர் இவர். இருவருக்கும் பல வருடங்கள் பல பாடல்களை பாடியவர். 1923ம் வருடம் பிறந்த டி.எம்.எஸ் 2013ம் வருடம் தனது 90வது வயதில் மறைந்து போனார். 7 வயது இருக்கும்போது கர்நாடக சங்கீதத்தை கற்றவர் இவர்.

tms1

tms1

துவக்கத்தில் இவருக்கு யாரும் சினிமாவில் பாட வாய்ப்பு தரவில்லை. பல இசையமைப்பாளர்களிடம் நேரில் சென்று பாடி காட்டுவார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. சில வருட போராட்டங்களுக்கு பின்னரே அவருக்கு பாட்டு பாட வாய்ப்பு கிடைத்தது. இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய டி.எம்.எஸ் ‘சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில் உள்ள பிள்ளையார் தெருவில் மாதம் 10 ரூபாய் வாடகைக்கு குடியிருந்தேன். அப்போது என்னிடம் பச்சை நிறத்தில் ஒரு சைக்கிள் இருந்தது. அதை எடுத்துக்கொண்டு சினிமாவில் பாட வாய்ப்பு கேட்க செல்வேன்.

சில படங்களில் பாடினாலும் ‘தூக்கு தூக்கி’ படம் என்னை தயாரிப்பாளர்களிடம் பிரபலப்படுத்தியது. திடீரென என் வீட்டின் முன் 10 கார்கள் வந்து நிற்க அந்த ஏரியாவே மிரண்டு போனது. ‘இந்த பழைய சைக்கிளில் ஒருத்தன் போவானே!..அவன் ‘தூக்கு தூக்கி’ படத்துல பாடியிருக்கானாம். அவன பாக்கத்தான் கார் வந்திருக்கு’ என அந்த ஏரியாவில் பேசிக்கொண்டார்கள்.

thooku

thooku

தூக்கு தூக்கி திரைப்படத்திற்கு பின் தயாரிப்பாளர்கள் என்னை தேடி வந்தார்கள். நான் யாருக்கு நன்றி சொல்வது?.. அந்த படத்திற்கு இசையமைத்த ஜி.ராமநாதனுக்கும், நான் பாடிய பாடலை தன் பாடலாக நினைத்து அந்த பாவம் மற்றும் உணர்வை நடிப்பில் கொண்டு வந்தாரே சிவாஜி என எல்லோருக்கும் சேரும்’ என டி.எம்.எஸ். மனம் உருகி கூறினார்.

1954ம் வருடம் வெளிவந்த ‘தூக்கு தூக்கி’ படத்தில் 8 பாடல்களை டி.எம்.எஸ் பாடியிருந்தார். இந்த படதில் சிவாஜி ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story