இந்த ஆண்டில் கோலிவுட்டில் நடந்த டாப் 5 தரமான சம்பவங்கள்… என்னென்னலாம் நடந்துருக்கு பாருங்க!!

by Arun Prasad |
Trending 2022
X

Trending 2022

2022 ஆம் ஆண்டு தனது இறுதி மாதத்தின் கடைசி வாரத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், இந்த ஆண்டில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் டிரெண்டிங்காக வலம் வந்த தரமான சம்பவங்களை குறித்து இப்போது பார்க்கலாம்.

5. வலிமை அப்டேட்

அஜித்குமாரின் 60 ஆவது திரைப்படத்தின் டைட்டில் “வலிமை” என்று அறிவிக்கப்பட்டப் பிறகு பல மாதங்களாகவே திரைப்படம் குறித்த எந்த அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை. ஆதலால் அஜித் ரசிகர்கள் வெறியாகி தயாரிப்பாளர் போனி கபூரின் டிவிட்டர் பக்கத்தில் வலிமை திரைப்படத்தின் அப்டேட் குறித்து கேட்கத் தொடங்கிவிட்டனர். மேலும் “வலிமை அப்டேட்” என்ற ஹாஷ்டாக்கும் டிரெண்ட் ஆகியது.

Valimai

Valimai

அதுமட்டுமல்லாது சிவாங்கி தொடங்கி வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் வரை ஒருத்தரையும் மிச்சம் வைக்காமல் “வலிமை அப்டேட்” கேட்டனர் ரசிகர்கள். “வலிமை” திரைப்படம் வெளியாகும் வரை “வலிமை அப்டேட்” டாப் டிரெண்டிங்கில் இருந்தது என்பதுதான் உண்மை.

4. இரவின் நிழல்

எதையும் வித்தியாசமாக செய்யும் பார்த்திபன், வித்தியாசமான முறையில் எடுத்த திரைப்படம்தான் “இரவின் நிழல்”. இத்திரைப்படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்ற விளம்பரத்துடன் வெளிவந்தது.

Iravin Nizhal

Iravin Nizhal

ஆனால் இத்திரைப்படம் வெளிவந்தபோது பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் “இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை. பார்த்திபன் நன்றாக ஏமாற்றுகிறார்” என கூற பார்த்திபனுக்கும் ப்ளு சட்டை மாறனுக்கும் முட்டிக்கொண்டது. எனினும் “இரவின் நிழல்” திரைப்படம் மக்களை அவ்வளவாக கவரவில்லை.

3. கூல் சுரேஷ்

சிம்பு “வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே கூல் சுரேஷ் அத்திரைப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் இறங்கிவிட்டார் என்றுதான் கூறவேண்டும். எந்த திரைப்படம் வெளிவந்தாலும் ஊடகங்கள் கூல் சுரேஷை மொய்க்கத் தொடங்கின.

Cool Suresh

Cool Suresh

“வெந்து தணிந்தது காடு, கோப்ராவுக்கு வணக்கத்தை போடு”, “வெந்து தணிந்தது காடு, லெஜண்டுக்கு வணக்கத்த போடு” என எந்த திரைப்படம் வெளிவந்தாலும் அதனை வெந்து தணிந்தது காடுடன் இணைத்து அவருக்கே தெரியாமல் அத்திரைப்படத்தை புரோமோட் செய்துகொண்டிருந்தார். குறுகிய காலகட்டத்தில் இணைவாசிகளிடம் மிகப் பிரபலமாக அறியப்பட்ட கூல் சுரேஷ் டிரெண்ட்டிங்கில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

2. நயன்தாரா

பல ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் செய்துகொண்ட சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர்.

Nayanthara-Vignesh Shivan

Nayanthara-Vignesh Shivan

இதனை கேட்ட தமிழ்ச் சமூகம் உச்சக்கட்ட ஷாக்கில் உறைந்துப்போனது. அதன் பின் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக தெரியவந்தபின், திருமணமான 5 ஆண்டுகள் கழித்துத்தான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டம் கூறுகிறது, நயன்தாரா சட்டத்தை மீறிவிட்டார் என்றெல்லாம் கூறி பலரும் நயன்தாராவை கண்டித்து வந்தனர். எனினும் நயன்தாரா, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் 2016 ஆம் ஆண்டிலேயே பதிவு திருமணம் நடந்துவிட்டதாக கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

1.உதயநிதி ஸ்டாலின்

இந்த ஆண்டில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்திருப்பது உதயநிதி ஸ்டாலின்தான். 2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளார் உதயநிதி. எந்த திரையரங்கம் சென்றாலும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் என்ற பெயரே கண்களில்பட்டது.

இதையும் படிங்க: “எம்.ஜி.ஆர்தான் என்னோட வாரிசு”… புரட்சித் தலைவர் குறித்து அன்றே கணித்த பிரபல நடிகர்…

Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin

மேலும் அரசியல் ரீதியாக மாற்றுக்கருத்து உள்ளவர்களின் கண்களை அந்த பெயர் உறுத்திக்கொண்டே இருந்தது. “உதயநிதி தயாரிப்பாளர்களை மிரட்டி அவர்களின் படங்களை வெளியிடுகிறார்” என புரளிகளை கிளப்பினர். ஆனால் தயாரிப்பாளர்கள்தான் உதயநிதியை தேடிச் சென்று அவர்களின் படங்களை வெளியிடுமாறு வேண்டுகோள் விடுப்பதாக பலரும் தெரிவித்தனர்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டிருப்பதால் இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை என கூறிவிட்டார். மேலும் இனி அவர் வெளியிடும் திரைப்படங்களில் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் மட்டுமே இடம்பெறும் எனவும் அவரது பெயர் இடம்பெறாது எனவும் கூறப்படுகிறது. எனினும் இந்த ஆண்டில் இணையவாசிகளின் மத்தியில் மிக நீண்ட காலமாக டிரெண்டிங்கில் இருந்தவர் உதயநிதி என்பதை நம்மால் மறுக்கவே முடியாது.

Next Story