மே 9ம் தேதி வெளியாகும் 7 திரைப்படங்கள்!.. கல்லா கட்டுமா கஜானா?!..

#image_title
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. சில சமயம் நிறைய படங்களும் சில சமயம் ஒன்றிரண்டு படங்களும் வெளியாகும். குறிப்பாக ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது சின்ன நடிகர்கள், அதாவது சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகாது.
ஏனெனில், பெரிய நடிகர்களின் படங்களுக்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்பதால் சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் போய்விடும். எனவேதான், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளில் சின்ன பட்ஜெட் படங்களை வெளியிடமாட்டார்கள்.
கடந்த வாரம் மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த ரெட்ரோ படமும், அறிமுக இயக்குனர் அபிஷன் இயக்கத்தில் சசிக்குமார் - சிம்ரன் நடித்து உருவான டூரிஸ்ட் பேமிலி படமும் ஒன்றாக வெளியானது. அதேபோல், தெலுங்கு சினிமா நடிகர் நானியின் ஹிட் 3 படமும் தமிழகத்தில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.

இதில், சூர்யாவின் ரெட்ரோ படம் இதுவரை 75 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் இப்படம் 46 கோடி வரை வசூல் செய்திருக்கிறது. அதேபோல், சசிக்குமாரின் டூரிஸ்ட் பேமிலி படம் 12 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், வருகிற 9ம் தேதி வெள்ளிக்கிழமை என்னென்ன தமிழ் படங்கள் வெளியாகிறது என பார்ப்போம்.
முதலில் ஃபோர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் பிரதீப் சாம்ஸ் என்பவர் தயாரித்துள்ள கஜானா படம் 9ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் யோகிபாபு, இனிகோ பிரபாகர், வேதிகா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். புதையலை தேடி அலையும் ஒரு கும்பலை பற்றிய கதை இது. இந்த பட விழாவில்தான் ‘காசு கொடுத்தால்தான் யோகிபாபு புரமோஷனுக்கு வருகிறார்’ என ஒருவர் பேசினார்.
மேலும், நிழற்குடை, வாத்தியார் குப்பம், என் காதலே, அம்பி, சவுடு மற்றும் எமன் கட்டளை போன்ற படங்களும் வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் எந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.