Karikaadan Teaser: கேஜிஎஃப், காந்தாரா வரிசையில் அடுத்த பிரம்மாண்ட படைப்பு.. மிரட்டிய ‘கரிகாடன்’ டீஸர்
கன்னட சினிமா தன்னுடைய வித்தியாசமான முயற்சிகளால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. 200 கோடியையே எட்ட முடியாத நிலையில் இருந்த கன்னட சினிமாவை யஷ் நடித்த கேஜிஎஃப் படம் 1000 கோடிக்கு எடுத்துச் சென்றது. அடுத்து ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா படமும் பெரிய வசூலை ஈட்டியது. புதுமையான கதைகள் மற்றும் புது முயற்சிகளால் பல புது முகங்கள் சினிமாவில் நுழைகின்றனர்.
அந்த வகையில் கரிகடா என்ற புது முயற்சியில் ரசிகர்களை சந்திக்க தயாராக உள்ளன. இந்தப் படத்தில் நடராஜ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் ஐடி துறையில் இருந்து வந்தவர். நடிகராக மட்டுமில்லாமல் கதையாசிரியராகவும் இந்த படத்தில் அறிமுகமாகிறார் நடராஜ். தொடர்ந்து சினிமாவில் நல்ல படங்களை கொடுக்க வேண்டும். தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார் நடராஜ்.
இந்தப் படத்தின் டைட்டில் டீஸர் ஏற்கனவே வெளியாகி பார்வையாளர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. தன்னுடைய விடுமுறை நேரங்களில்தான் இந்தப் படத்தில் நடித்தாராம். இந்தப் படம் முடிய சரியாக ஒரு வருடம் ஆனதாக சொல்லப்படுகிறது. ரிஷப் ஷெட்டிக்கு எப்படி அவருடைய மனைவி உறுதுணையாக இருந்தாரோ அதை போல நடராஜுக்கும் அவருடைய மனைவி பக்க பலமாக இருந்துள்ளார்.
கரிகடா படத்திற்கு அவருடைய மனைவி தரப்பில் இருந்தும் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நடராஜின் நண்பர் ரவி படத்தை தயாரித்திருக்கிறாராம். இந்தப் படத்தை கில்லி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் பல ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே தலட்டி என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இருந்தாலும் கரிகடா படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளார் கில்லி வெங்கடேஷ்.

இந்தப் படத்தில் நிரிஷா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். அதிஷய் ஜெயின் மற்றும் ஷஷாங்க் சேஷகிரி ஆகியோர் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக ஜீவன் கவுடா மற்றும் எடிட்டராக தீபக் சிஎஸ் பணியாற்றியிருக்கிறார்கள். காட்டில் வாழும் கிராமவாசிகளின் கதையை சொல்லும் படமாக கரிகடா படம் தயாரகியிருக்கிறது. இந்தப் படத்தில் சிலிர்ப்பூட்டும் மற்றும் பல ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாக டீஸரில் தெரிகிறது. டீஸர் வெளியான 10 நாள்களில் 2 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
