என்கிட்ட இருந்து அவன காப்பாத்தவே முடியாது!.. அதிர வைக்கும் வேட்டையன் டிரெய்லர்!...
Vettaiyan trailer: ஜெயிலர் பட ஹிட்டுக்கு ரஜினி மளமளவென அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கினார். அதில் ஒன்றுதான் வேட்டையன். ஜெய்பீம் படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல் இப்படத்த இயக்கியிருக்கிறார். ஞானவேல் அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளர். அதோடு, ஜெய்பீம் படத்தில் மக்களின் பிரச்சனை பற்றி பேசியிருந்தார்.
இவர் எப்படி ரஜினிக்கு செட் ஆவார் என பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், ரஜினிக்கு பொருந்துவது போல் ஒரு கதையை எழுதியிருக்கிறார் ஞானவேல். சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த படத்தில் பல முக்கிய தகவல்களை ஞானவேல் பகிர்ந்து கொண்டார்.
வழக்கம்போல் இந்த படத்திற்கும் அனிருத்தே இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல் கூட சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. காவல்துறையில் என்கவுண்டர் ஏன் நடக்கிறது என்பதை பின்னணியாக வைத்து பரபர திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஞானவேல்.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. இதில், பரபர ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. ஒரு பெண்ணை ஒருவன் கொடூரமாக கொலை செய்துவிட அவனை என்கவுண்டர் செய்ய ரஜினி களம் இறங்குவது போல ரஜினியின் எண்ட்ரி காட்டப்பட்டிருக்கிறது.
மேலும், வில்லனாக வரும் தெலுங்கு நடிகர் ராணாவை கைது செய்ய ரஜினி என்னென்ன முயற்சிகள் எடுக்கிறார் என்பது பற்றிய காட்சிகள் டிரெய்லரில் காட்டப்பட்டிருக்கிறது. டிரெய்லரை பார்க்கும்போது வேட்டையன் படம் ரஜினி ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்தாக அமையும் என கணிக்கப்படுகிறது.
ரஜினியின் மேலதிகாரியாக வரும் அமிதாப்பச்சனிடம் ‘நீங்கள் என்னை எங்கு மாற்றினாலும் என்கிட்ட இருந்து அவன் தப்பவே முடியாது’ என ரஜினி பேசும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. வேட்டையன் படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளது.