த்ரிஷா-நயன்தாரா இணையும் புதிய திரைப்படம்… அட்டகாசமா இருக்கப்போகுது!!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. “ஐயா” என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிய நயன்தாரா, தனது இரண்டாவது திரைப்படத்திலேயே ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்தார். அதன் பின் தமிழின் டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக ஜொலித்தார்.
எனினும் இடைப்பட்ட காலத்தில் தனது சொந்த பிரச்சனை காரணமாக, அவரது கேரியரில் சரிவு வரத்தொடங்கியது. “நயன்தாராவின் கேரியர் அவ்வளவுதான்” என்றெல்லாம் பேசத்தொடக்கிவிட்டனர். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் கம்பேக் கொடுத்து தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.
நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து வரும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் “கோல்ட்” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது.
அதே போல் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக இளைஞர்களின் மனதில் சேர் போட்டு உட்கார்ந்திருப்பவர் த்ரிஷா. “சாமி” திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த த்ரிஷா, அதன் பின் தமிழ்நாட்டு இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். சமீபத்தில் த்ரிஷா நடிப்பில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் குந்தவையாக வந்து நமது உள்ளங்களை கொள்ளைக்கொண்டு போனார். மேலும் மலையாளத்தில் “ராம்” என்ற திரைப்படத்திலும் தமிழில் “தி ரோடு” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நயன்தாராவும் த்ரிஷாவும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கப்போவதாக ஒரு அட்டகாசமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மலையாளத்தில் ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படம் உருவாக உள்ளதாம். அதில் த்ரிஷாவுடன் நயன்தாரா இணைந்து நடிக்கப்போவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
த்ரிஷா தற்போது “ராம் பார்ட் 1” என்ற மலையாள திரைப்படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து ஜீத்து ஜோசஃப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நயன்தாராவும் த்ரிஷாவும் இணைந்து நடிக்க உள்ளதாக ஒரு சில தகவல்கள் வெளியாகிறது. இந்த இருவரில் ஒருவர் நடித்தாலே ரசிகர்களுக்கு உற்சாகம் தாங்காது. இதில் இருவரும் நடித்தால் கொண்டாட்டம்தான்.