நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை வழங்கியிருக்கிறது தேர்தல் ஆணையம். விசில், கிரிக்கெட் பேட், ஹெல்மெட் உள்ளிட்ட 10 சின்னங்களை கொடுத்து இதில் ஏதேனும் ஒன்றை தங்களுக்கு ஒதுக்கும்படி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது.
அதில் தவெக முதலில் கேட்டிருந்த விசில் சின்னத்தையே தேர்தல் ஆணையம் அவர்களுக்கு கொடுத்திருக்கிறது. விசில் சின்னம் என்பது ஒரு பிரபலமான சின்னம். பலமுறை பல தேர்தல்களில் சுயேட்சைகளுக்கு இந்த சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் ஆம் ஆத்மி உட்பட பல கட்சிகள் விசில் சின்னத்தை பயன்படுத்தியிருக்கின்றன.
விஜய் மூலம் விசில் சின்னம் தமிழகத்திலும் அதிக அளவில் பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோட் படத்தில் கூட ‘விசில் போடு’ என்று பாடியிருந்தார் விஜய். எனவே, ‘விசில் போடு’ என்பதை பிரச்சார வாசகமாக தவெகவினர் பயன்படுத்துவார்கள். பிரச்சார மேடைகளில் ‘விசில் போடு’ என விஜய் சொல்லும்போது மக்களிடம் அது இன்னும் ரீச் ஆகும்.
தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் அது உலக அளவில் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது. அதே நேரம் தவெகவுக்கு விசில் கிடைத்தாலும் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. விசில் பொதுச் சின்னமாக ஒதுக்கப்பட்டாலும் தவெக போட்டியிடாத தொகுதிகளில் விசில் சின்னம் வேறு யாருக்கேனும் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் விசில் சின்னத்தை தவெக பெற முடியும். ஒருவேளை கூட்டணி கட்சிகள் அவர்களது சின்னத்தில் போட்டியிட்டால் அங்கு விசில் சின்னம் சுயேட்சைக்கு சென்று விடும்.
அப்படி சுயேட்சை வேட்பாளர்கள் விசில் சின்னத்தில் போட்டியிடும்போது ஓட்டு போடுபவர்களிடம் அது குழப்பத்தை ஏற்படுத்தும். இதையெல்லாம் தாண்டி தவெக வாக்குகளை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
