இளையராஜா இசையில் அற்புதம்... அதிசயம்... ஒரே ராகத்தில் மாறுபட்ட இரு பாடல்கள்...!
ராகதேவன் என்று தமிழ்ப்பட உலகில் அழைக்கப்படும் இசை மேதை இளையராஜா. இவரது இசையில் அனைத்துப் பாடல்களும் முத்தானவை தான். ஒரே ராகத்திலான இரு வேறு பாடல்களில் இவர் காட்டும் வித்தியாசங்கள் பற்றி ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...
ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த பாடல். கிழக்கே போகும் ரயில். பாரதி ராஜா இயக்கத்தில் இளையராஜா இசை அமைத்த பாடல். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் எழுதியிருந்தார். மலேசியா வாசுதேவன், ஜானகி பாடியுள்ளார். மலர்களே நாதஸ்வரங்கள் பாடல்.
எம்புருசன் தான் எனக்கு மட்டும் தான் படத்தை மனோபாலா இயக்கியுள்ளார். விஜயகாந்த், சுஹாசினி நடித்துள்ளனர். வாலி எழுதிய பாடல். அது என்னன்னா பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா. இந்தப் பாடலும் அதே ஹம்சத்வனி ராகம் தான்.
இந்த இரு பாடல்களையுமே நாம் கேட்டதும் ரசிக்க ஆரம்பித்து விடுவோம். கிழக்கே போகும் ரயில் படத்தில் மலர்களே பாடல் வைக்கப்படவில்லை. இந்தப் பாடலில் காதலர்கள் இருவருக்கும் திருமணக் கனவு வருகிறது. அதை ஒட்டி எடுக்கப்பட்ட பாடல் இது.
அதே போலத் தான் பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா பாடலும். இதுவும் திருமணக் கனவு பாடல் தான். இந்தப் பாடலிலும் திருமணம் நடக்கிறது. குழந்தை பிறக்கிறது. அதன் பிறகும் கணவன் சும்மா இருக்காமல் கட்டில் ஒரு பக்கம் இருக்கட்டும். தொட்டில் ஒரு பக்கம் இருக்கட்டும் என்கிறான். நாம அப்படி இப்படி இருப்போம் என்கிறான்.
இளையராஜாவும் அந்தப் பாடல்களுக்கு ஏற்றவாறு மலர்களே பாடலில் நாதஸ்வரத்தில் அசத்தியிருப்பார் இளையராஜா. புல்லாங்குழல், ஸ்டிரிங்ஸ் இசையும் கேட்பதற்கு நயமாக இருக்கும். அதே நேரத்தில் பூ முடித்து பாடலில் அதிகபட்சமாக ஸ்ட்ரிங்ஸ்சும், புல்லாங்குழலும் தான் இடம்பெறும்.
மலர்களே பாடலில் ஜானகி குரலைத் தவழச் செய்து இருப்பார். மலேசியாவும் பாடுவார். அதனுள் ஜானகியின் குரலும் அனாயசமாகப் புகுந்து ராகம் பாடுவது கேட்கவே இதமாக இருக்கும்.
இரண்டுமே திருமணத்திற்கான பாடல் தான். மலர்களே பாடலில் திருமணத்திற்குப் பிறகு லாலி பாடுவாங்க. அற்புதமாக இருக்கும். அதே நேரத்தில் பூ முடித்து பாடலில் ஐயர் மந்திரம் ஓதும்போது போகிற போக்கில் இடை இசையாக பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. இவை தான் இரு பாடல்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை.
மலர்களே பாடல் அந்தரத்தில் மிதப்பது போல இருக்கும். ஆரம்பத்தில் ஸ்பீடாகச் செல்லும். ஆனால் ஜானகி இழுத்துப் பிடிச்சி உட்கார வைத்து இருப்பார். அதே நேரத்தில் புல்லாங்குழல் ஸ்ட்ரிங்ஸ் போட்டு ஸ்பீடாகச் செல்லும். ஆனால் பாட்டு வேகமாகப் போவது போல இருக்கும். ஆனால் அது கிடையாது. ரெண்டுமே ஒரே டெம்போ தான். பாடகர்கள் தான் குரலில் ஜாலம் காட்டியிருப்பார்கள். இரண்டு பாடல்களையும் கலந்து கலந்து எப்படி வேண்டுமானாலும் பாடலாம். பாடிப்பார்த்தால் உங்களுக்கேத் தெரியும்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.