இரண்டு ரசிகர்கள் எழுதிய கடிதம்!.. சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டம் வந்தது இப்படித்தான்!..
எம்.ஜி.ஆரை போலவே சிறு வயது முதல் நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்து நடிகராக மாறியவர் சிவாஜி கணேசன். எம்.ஜி.ஆர் சினிமாவில் 10 வருடம் போராடிய பின்னரே ராஜகுமாரி படத்தில் ஹீரோவாக மாறினார். ஆனால், சிவாஜியோ பராசக்தி என்கிற முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தார்.
சிவாஜி ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை எனும் சொல்லும் அளவுக்கு பல வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சிவாஜி. ஏழை, தொழிலதிபர், மருத்துவர், வழக்கறிஞர், வில்லன், கடவுள் அவதாரம், சரித்திர புருஷர்கள், புராணங்களில் வந்த கதாபாத்திரங்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் என பல வேடங்களிலும் அசத்தினார்.
இதையும் படிங்க: இந்த நடிப்பெல்லாம் எனக்கு தெரியாது… சிவாஜியிடம் செமையாக வாங்கிக்கட்டிய பத்மினி…
மேலும், தமிழக வரலாற்றில் இடம் பெற்ற பல அரசர்களையும் கண் முன் கொண்டு வந்தார். எனவேதான், நடிப்பின் இலக்கணமாக சிவாஜி மாறினார். அவருகு சிவாஜி உள்ளிட்ட சில பட்டங்கள் கிடைத்தாலும் நடிகர் திலகம் என்கிற பட்டம்தான் நீடித்து நின்றது. பொதுவாக நடிகர்களுக்கு தயாரிப்பாளர், இயக்குனர்கள் ஆகியோர்தான் பட்டங்களை கொடுப்பார்கள். ஆனால், சிவாஜிக்கு நடிகர் திலகம் பட்டத்தை கொடுத்தது 2 ரசிகர்கள் என்பது பலருக்கும் தெரியாது.
60களில் முக்கிய சினிமா பத்திரிக்கையாக இருந்தது பேசும் படம். இந்த பத்திரிக்கை சினிமா பற்றிய முக்கிய செய்திகள், புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகளை வெளியிட்டது. இந்த பத்திரிக்கையில் பல ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்தவர் எஸ்.வி.சம்பத்குமார். பராசக்தி படத்தில் அறிமுகமானது முதல் சிவாஜியுடன் பழகி வந்தார் சம்பத்குமார்.
ஒவ்வொரு மாதமும் சிறந்த நடிகர்களின் புகைப்படங்களை வெளியிட்டு அவரைப்பற்றி ஒரு கட்டுரையையும் எழுதுவார்கள். பராசக்தி படம் வெளிவந்தபோது சிவாஜியின் புகைப்படத்தை பகிர்ந்து இம்மாத நட்சத்திரம் என கட்டுரை எழுதினார்கள். அதோடு, இவர் பின்னாளில் பெரிய நடிகராக வரும் எனவும் எழுதி இருந்தார் சம்பத்.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல எம்.ஜி.ஆரும் சிவாஜியும் வேற வேற!.. சீக்ரெட் சொல்லும் நாகேஷ்…
இந்த பத்திரிக்கைக்கு 2 வாசகர்கள் எழுதிய கடிதத்தில் ‘சிவாஜியை நாங்கள் கவனித்து வருகிறோம். படத்திற்கு படம் அவரின் நடிப்பு மெருகேறி வருகிறது. அவருக்கு பேசும் படம் ஒரு விழா நடத்தி நடிகர் திலகம் என்கிற பட்டத்தை கொடுக்க வேண்டும். அதற்கும் ஆகும் செலவுக்கு இந்த சிறுதொகையை அனுப்பி வைக்கிறோம்’ என குறிப்பிட்டு பணத்தை அனுப்பி வைத்திருந்தனர். ஆனால், அந்த பணத்தை அவர்களுக்கே திருப்பி அனுப்பிய சம்பத்குமார் ‘உங்கள் உதவிக்கு நன்றி. இனிமேல் நாங்கள் சிவாஜியை நடிகர் திலகம் என்றே குறிப்பிட்டு எங்கள் பத்திரிக்கையில் எழுதுகிறோம்’ என கடிதம் எழுதினார்.
அதேபோல், எழுதவும் துவங்கினார். அதன்பின் 1957ம் வருடம் வெளியான அம்பிகாபதி படத்தில்தான் முதன் முதலில் படத்தின் டைட்டிலில் சிவாஜியின் பெயருக்கு முன் நடிகர் திலகம் என்பது சேர்க்கப்பட்டது. அதாவது சிவாஜி சினிமாவில் அறிமுகமாகி 5 வருடங்களிலேயே
அவருக்கு நடிகர் திலகம் பட்டம் கிடைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.