More
Categories: Cinema History Cinema News latest news

மனோபாலாவுக்கு வந்த இரண்டு ஃபோன் கால்கள்.. அதிர்ஷ்டம்னா இதுதான் போல!

மனோபாலா கடந்த 3 ஆம் தேதி கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்த செய்தியை நம்மில் பலரும் அறிவோம். அவரது நினைவலைகளை இப்போதும் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். திரைத்துறையில் பகைவர்கள் இல்லாமல் ஒரு நடிகரோ இயக்குனரோ வலம் வரமுடியாது. ஆனால் மனோபாலாவை பொறுத்தவரை அவருக்கு சினிமாத்துறையில் பகைவர்கள் என்று யாரும் கிடையாது. அனைத்து நடிகர்கள், இயக்குனர்களிடமும் நட்பாக பழகி வந்தவர் மனோபாலா.

Manobala

மனோபாலா தொடக்கத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதனை தொடர்ந்து “ஆகாய கங்கை” என்ற திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படம் கொஞ்சம் சுமாராகவே ஓடியது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய “பிள்ளை நிலா” திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. அத்திரைப்படத்திற்கு பிறகு மனோபாலாவும் கதாசிரியர் கலைமணியும் குற்றாலம் பகுதியில் ஒரு ரிசார்டில் தங்கி அடுத்த படத்திற்கான டிஸ்கஷனில் இருந்தார்களாம். அப்போது மனோபாலாவுக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்திருக்கிறது. யாரென்று பார்த்தால் எம்.ஜி.ஆர் நிறுவனமான சத்யா மூவீஸ். “ஒரு புதிய திரைப்படத்தை குறித்து பேசவேண்டும். உடனே சென்னைக்கு கிளம்பி வாருங்கள்” என கூறினார்களாம்.

Advertising
Advertising

MGR

இதனை தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்திருக்கிறது. இப்போது அழைத்தது கலைஞரின் “பூம்புகார் புரொடக்சன்ஸ்” நிறுவனம். “ஒரு நல்ல விஷயம். புதிய படத்தை இயக்குவதற்காக உங்களிடம் பேசவேண்டும். உடனே சென்னைக்கு கிளம்பி வாருங்கள்” என கூறினார்களாம். மனோபாலாவுக்கோ குழப்பமாக இருந்திருக்கிறது. இரண்டு நிறுவனங்களுமே மிகப்பெரிய நிறுவனங்கள். எந்த நிறுவனத்திற்கு இப்போது செல்வது என தெரியவில்லை. எனினும் சென்னைக்கு கிளம்பினார் மனோபாலா. அங்கே “பூம்புகார் புரொடக்சன்ஸ்” நிறுவனத்தைச் சேர்ந்த முரசொலி செல்வத்திடம் மனோபாலா, விவரத்தை கூறினார். உடனே இருவரும் கலைஞரை சென்று பார்த்தனர்.

Kalaignar

அப்போது மனோபாலா கலைஞரிடம், “சார், ஒரு சின்ன தயக்கம். எனக்கு சத்யா மூவீஸ்ல இருந்து ஃபோன் வந்தது. அவுங்க ஏதோ புது படம் எடுக்குறாங்களாம். உங்க கம்பெனிக்கு டைரக்ட் பண்ணவா இல்லை அவங்க கம்பெனிக்கு டைரக்ட் பண்ணவான்னு குழப்பமா இருக்கு” என கூறியிருக்கிறார். அப்போது அருகில் நின்றுகொண்டிருந்த முரசொலி செல்வம், “சத்யா மூவீஸ் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக இருக்கிறார்கள் என்று ஒரு தகவல் வருகிறது” என கூறியிருக்கிறார். இதனை கேட்டுக்கொண்டிருந்த கலைஞர், “இதுல என்ன குழப்பம். ரஜினி எவ்வளவு பெரிய ஹீரோ. உன்னோட எதிர்காலம் நல்லா இருக்க வேண்டாமா? போ அவுங்க கம்பெனியிலேயே படம் பண்ணு. நான் வேற யாரையாவது வைத்து டைரக்ட் பண்ணிக்கிறேன்” என கூறினாராம்.

Oorkaavalan Movie

அதன் பின் கலைஞரின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டு நேராக சத்யா மூவீஸ் அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார் மனோபாலா. அவ்வாறு ரஜினிகாந்தை வைத்து மனோபாலா இயக்கிய திரைப்படம்தான் “ஊர்க்காவலன்”.

இதையும் படிங்க: கல்யாண சீனுக்கு பிறகு ரேப் சீன் நடிக்கணும்!.. ரெண்டு நடிகைகளுக்கு பயம் காட்டிய இயக்குனர்கள்!..

Published by
Arun Prasad