1970-ம் ஆண்டு ஜப்பானில் மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்ட பொருட்காட்சிதான் உலகம் சுற்றும் வாலிபன் படம் உருவாகக் காரணமாக இருந்தது. அந்தப் பொருட்காட்சியைப் பற்றி கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், அந்த அளவுக்கு பிரமாண்ட பொருட்காட்சியைத் தமிழகத்து மக்கள் நேரில் போய் பார்க்க முடியாது. அதை நாம் படமாக்கி மக்களுக்குக் காட்ட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார். 1970-ல் உலகம் சுற்றும் வாலிபன் படத்தோட ஷூட்டிங்கையும் தொடங்கியிருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆர் தி.மு.கவில் இருந்தார்.
1969-ம் ஆண்டிலேயே கருணாநிதி முதலமைச்சராகிவிட்டார். படத்தின் ஷூட்டிங் இறுதிக் கட்டத்தில் இருந்தபோது, எம்.ஜி.ஆர் தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டு அ.தி.மு.க என்கிற கட்சியையும் தொடங்கிவிட்டார். இந்த சூழலில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தைப் பற்றிய தகவல்களை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தப் படம் மிகப் பிரமாதமாக வந்திருக்கிறது. படம் வெளியானால் எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய பேரும் செல்வாக்கும் கிடைக்கும் என்று உளவுத்துறை தகவல் கொடுத்திருக்கிறது. இதனால், அந்தப் படத்தை எப்படியும் வெளிவர விடக்கூடாது என்று கருணாநிதி ரகசியமாக ஒரு திட்டத்தைத் தீட்டியிருக்கிறார்.
அப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் உருவாகும் படங்களுக்கு சென்னையில் இருக்கும் ஜெமினி கலர் லேப்பில்தான் புராசஸிங் செய்வார்கள். அப்படி, புராசஸிங்குக்கு வரும்போது படத்தின் நெகடிவ் காப்பியை மொத்தமாகத் தீவைத்துக் கொளுத்திவிடலாம் என்று திட்டம் போட்டிருக்கிறார். இந்தத் தகவலைத் தனது நெருங்கிய நண்பரான மதுரை முத்துவிடம் கருணாநிதி சொல்லியிருக்கிறார். மதுரையில் அழகிரி ஒரு காலகட்டத்தில் எந்த அளவுக்கு செல்வாக்கோடு வலம் வந்தாரோ அதேபோல், 1970களில் செல்வாக்கோடு விளங்கிய அரசியல்வாதி அவர்.
ஆனால், இந்த ரகசிய திட்டம் பற்றி ஒரு பொதுக்கூட்ட மேடையில் முத்து பேசினார். உலகம் சுற்றும் வாலிபன் படம் நிச்சயம் வெளியாகாது. அப்படி வெளியானால், நான் சேலையைக் கட்டிக் கொண்டு வளையல் போட்டுக் கொள்கிறேன் என்றெல்லாம் அவர் பேசியது எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு வந்திருக்கிறது. எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறார்கள் என்றெண்ணிய எம்.ஜி.ஆர், அதற்கு எதிர்வினையாற்றாமல் அமைதி காத்திருக்கிறார். இப்படியான சூழ்நிலையில், ஒருநாள் நாளிதழில் வெளியான முழுப்பக்க விளம்பரம் மதுரை முத்துவை நிலைகுலையச் செய்திருக்கிறது.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து, ரிலீஸாகும் தியேட்டர்கள் லிஸ்டோடு வெளியான விளம்பரம் பரபரப்பைப் பத்த வைத்தது. இதுபற்றி கருணாநிதியிடம் மதுரை முத்து கேட்கவே, ஜெமினி லேபுக்கு புராசஸிங்குக்கு படம் இன்னும் வரவில்லை. அதனால், படம் நிச்சயம் வெளியாகாது. நம்பிக்கையோடு இரு என்று பதில் வந்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர் ரகசியமாக ஒரு வேலை செய்திருந்தார். சென்னையில் இருந்து உலகம் சுற்றும் வாலிபன் படப்பெட்டியை ரகசியமாக மும்பை கொண்டு சென்றதோடு, அங்கிருக்கும் ஒரு லேபில் கலர் புராசஸிங் செய்திருக்கிறார். அதேபோல், படம் ரிலீஸாகாது என்று சொன்ன மதுரை முத்துவின் சொந்த ஊரான மதுரையில்தான் படம் முதலில் ரிலீஸாக வேண்டும் என்றும் திட்டமிட்டு ஒரு காரியத்தைச் செய்தார்.
மும்பையில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டர்கள் 20 பேர் பாதுகாப்போடு நேரடியாக படப்பெட்டி மதுரை வந்திறங்கியது. படப்பெட்டி அவர்கள் பாதுகாப்போடு மதுரை மீனாட்சி தியேட்டருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. படத்துக்கு செம ரெஸ்ஃபான்ஸ். ஒருவருக்கு ஒரு டிக்கெட்தான் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கினார்கள். படத்தின் முதல் காட்சியிலேயே, அதிமுக-வின் கொடியோடு, `இந்த வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என ஓபனிங் சாங் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
அப்படி வெளியான படம் தமிழகம் முழுவதும் 217 நாட்கள் ஓடி மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்ததோடு எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்த்தது. படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து, மதுரை முத்துவின் வீட்டுக்கு தினமும் சேலையை தபாலில் அனுப்பி பதிலடி கொடுத்தார்கள் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். சுமார் 2 மாத காலம் அவர் வீட்டுக்கு தினசரி குறைந்தது 200 சேலைகளாவது வருமாம். ஒரு கட்டத்தில் அஞ்சல் துறையில் சொல்லி தனது வீட்டுக்கு எந்தவொரு பார்சல் வந்தாலும் டெலிவரி பண்ண வேண்டாம் என்று மதுரை முத்து சொல்லும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு, மதுரை முத்துவை அதிமுகவுக்கு இழுத்ததோடு, அவரையே அதிமுக சார்பில் மதுரை மேயராக்கி எதிர்முகாமுக்குப் பதிலடி கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
ஏஆர்.ரகுமான், சாய்ரா…
பிக்பாஸ் வீட்டில்…
Nepotism: பாலிவுட்டில்…
மழை வருவதற்கு…
கடந்த தீபாவளிக்கு…