எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத இந்தியன் படத்தின் அந்தக் காட்சி... அடுத்தடுத்த பாகத்திலும் தொடருமா?

இந்தியன் படத்தின் மையக்கதையே இந்தக் காட்சியில் தான் இருந்தது. லஞ்சத்திற்கு எதிராகப் போராடும் இந்தியன் தாத்தா தன் மகள், மகனைக்கூட அதற்குப் பலியாக்குகிறார். அந்த வகையில் இந்தப் படத்திற்கு மகுடம் சூட்டினாற் போல அமைந்த காட்சி இதுதான். நிழல்கள் ரவிக்கு இந்தியன் தாத்தா வித்தியாசமாக தண்டனை கொடுப்பது. இந்தக் காட்சியை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது.

இதையும் படிங்க... ரஜினிக்கு அப்படி ஒரு மகாசக்தியா? அவர் வைத்த டைட்டில்கள் எல்லாம் சூப்பர்ஹிட் ஆச்சே..!

சுஜாதாவின் வசனம் லஞ்சம் வாங்கி ஊறிப்போனவர்களின் நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல உள்ளது. இங்கு லஞ்சம் வாங்குவதும் தப்பு. கொடுப்பதும் தப்பு என்று அழுத்தமாக சொல்லப்பட்டு இருக்கும். கமல் இந்தக் காட்சியில் 10 நிமிடத்தில் தனது அனாயச நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

70 வயசு பாடி லாங்குவேஜ். ஆனால் முகபாவனையில் கட்டுக்கடங்காத ஆத்திரம், கோபம். இந்தக் காட்சியில் 'TODAYS INDIA' என்று பிரேமில் தெரியும். இந்தக் காட்சி 360 டிகிரியில் டிராலி கேமரா மூலம் வித்தியாசமாக எடுக்கப்பட்டு இருக்கும்.

ஒரே காட்சியில் இந்தியா, அரசியல் அமைப்பு, லஞ்சம் என அனைத்தையும் தன் வசனங்கள் மூலம் புட்டு புட்டு வைத்திருப்பார் எழுத்தாளர் சுஜாதா. படத்தின் மையக்கருத்தே இந்தக் காட்சியில் தான் உள்ளது. கமல், நிழல்கள் ரவியிடம் 'தேசிய ஒருமைப்பாடு என்பது இந்த நாட்டில் லஞ்சத்தில் மட்டும் தான்டா இருக்கு' என்பார். தொடர்ந்து சொல்வார்.

'நம்மைச் சுற்றி உள்ள குட்டி குட்டி நாடுகள் எல்லாம் முன்னேறிக்கிட்டே இருக்கு. ஏன்?'னு கேட்பார். அதற்கு நிழல்கள் ரவி 'அங்கெல்லாம் லஞ்சம் இல்ல'ன்னு சொல்வார். 'இருக்கு. இருக்கு...' என அழுத்தமாக சொல்லும் கமல். 'அங்கெல்லாம் கடமையை மீறரதுக்குத் தான் லஞ்சம். ஆனா இங்க கடமையை செய்யறதுக்கே லஞ்சம்'னு உரக்கச் சொல்வார்.

அப்போது கமலின் வார்த்தைகள் அவரது அடிவயிற்றில் இருந்து அழுத்தமாக வரும். அது ரசிகர்களை சீட்டின் நுனியில் கொண்டு வந்து உட்காரச் செய்யும்.

இந்தக் காட்சியில் கமல் நடிப்பு, டப்பிங் என அனைத்தும் உயிரோட்டமாக இருக்கும். இவை எல்லாவற்றையும் அருமையாகக் கொண்டு வந்து இருப்பார் இயக்குனர் ஷங்கர். இந்தக் காட்சிக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஒரு மெல்லிய பிஜிஎம்மைக் கொடுத்து உணர்வுப்பூர்வமாக ஆக்கியிருப்பார்.

இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தக் காட்சியைப் பார்த்தாலும் இப்போதும் பொருந்தக்கூடிய அளவில் தான் இருக்கும். அதுதான் படத்தின் ஸ்பெஷல். காட்சி முடியும்போது நிழல்கள் ரவி 'எவ்வளவு பணம் வேணுமோ தாரேன். என்னை விட்ருங்க'ன்னு கெஞ்சுவார். 'உங்களை எல்லாம் திருத்தவே முடியாதுடா.. உன்னைக் கொல்றதுல தப்பே இல்லை' என கமல் அவரைக் கொல்வது படத்தின் ஹைலைட் சீனாக அமைந்து விடுகிறது.

இதையும் படிங்க... இயக்குனர் மட்டும்தான் திரைக்கதை அமைப்பாரா? இளையராஜாவின் சோகப்பாடலில் இத்தனை புதுமையா?

இது போன்ற தரமான சம்பவங்கள் இந்தியன் 2லும் தொடருமா? அனிருத்தின் பின்னணி இசை எடுபடுமா? பாடல்கள் ரகுமானைப் போல இல்லையே... சுஜாதா இல்லாத நிலையில் ஜெயமோகனின் வசனங்கள் கைகொடுக்குமா என்று பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுகிறது. அதற்கு விடை படம் அடுத்த மாதம் (ஜூலை 12)திரைக்கு வந்ததும் தெரிந்து விடும்.

Related Articles
Next Story
Share it