More
Categories: Cinema History Cinema News latest news

உடுப்பி ஹோட்டலில் இருந்து வந்து சினிமாவில் அசத்திய நகைச்சுவை கிங் இவர் தான்…!

நகைச்சுவையில் இவர் ஒரு தமிழ்ப்படங்களில் ஒரு சில நடிகரைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். அவர்கள் பேசக்கூடத் தேவையில்லை. அந்தவகையில் உசிலைமணி ஒரு நகைச்சுவை ஜாம்பவான். இவர் தனது உடல் மொழியாலும், தனக்கே உரித்தான குரல் அம்சத்தாலும் தனது நகைச்சுவையை ரசிகர்கள் மத்தியில் அள்ளித் தெளிப்பதில் வல்லவர்.

காபின்னா காபி ரொம்ப நல்லாருக்கு…பேஷ் பேஷ்;;…நரசுஸ் காபிங்கற விளம்பரத்துல வர்ற உசிலைமணியை யாரும் மறக்கமுடியாது. அந்தவகையில் விளம்பர நடிகர்களுக்கே இவர் தான் முன்னோடி. இவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

Advertising
Advertising

usilaimani

நகைச்சுவை நாயகர் உசிலை மணியைத் தெரியாதவர்கள் தமிழ்த்திரையுலகில் யாரும் இருக்க முடியாது. அந்த அளவு காமெடியில் கலக்குபவர் இவர்.

1932 நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரம் கிருஷ்ணய்யர் – சுப்புலட்சுமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் உசிலைமணி. இவரது இயற்பெயர் சுப்பிரமணி. சிறுவயது முதலே ஊர்த்திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்களைக் காண்பதும், அதில் இடம்பெறும் வசனங்களை அப்படியேப் பேசிக்காட்டுவதுமாக தனித்திறமை உடையவராக விளங்கினார். கலை ஆர்வத்திலேயே இவரது எண்ணம் சென்றதால் கல்வியில் இவருக்கு ஆர்வமில்லாமல் போனது. 2ம் வகுப்புடன் நிறுத்திக்கொண்டார்.

நண்பர்களுடன் இணைந்து ஊர் சுற்றுவது, நாடகங்களைப் பார்க்கச் செல்வது, ஊரில் உள்ள திரையரங்குகளில் சென்று படம் பார்ப்பது என்றே பொழுதைக் கழித்தார். இதுகுறித்து பெற்றோர்கள் வருத்தமடைந்து தன் மூத்த மகனிடம் கூறினர். அவரும் உசிலம்பட்டியில் தான் நடத்தி வந்த உடுப்பி ஹோட்டலைக் கவனிக்க அழைத்துச் சென்றுவிட்டார்.

உசிலை மணி தனது ஓய்வு நேரங்களில் அங்கும் நடைபெறும் நாடகங்கள், திரைப்படங்களைக் கவனிக்கத் தவறுவதில்லை. இந்நிலையில் உசிலம்பட்டி நண்பர்களும், அவ்வூரும் இவருக்குப் பிடித்துப்போனது. அதனால் அங்கேயே வாழ விரும்பினார். அந்த ஊரின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக ஊரின் முதல் பெயரை தன் இயற்பெயரின் இறுதிப்பெயருடன் சேர்த்து உசிலைமணி என்று வைத்துக் கொண்டார்.

இந்நிலையில் அவரது நக்கல், நையாண்டி பேச்சினைக் கண்ட அவரது நண்பர்கள் அவருக்கு சினிமா ஆர்வத்தைத் தூண்டினர். தொடர்ந்து தனது அண்ணனிடம் ஹோட்டல் நிர்வாகத்தை ஒப்படைத்து விட்டு தனது கனவுகளுடன் சென்னை சென்றார்.

சென்னை சென்றதும் தனக்குத் தெரிந்தவர்களுடன் இணைந்து நாடகத்துறையில் நுழைந்தார்.

இதன்மூலம் அவர் வைரம் போல ஜொலித்தார். அங்கு தனக்கு அறிமுகமான தயிர்வடை தேசிகனிடம் நட்பு கொண்டு காமெடி ததும்பும் நாடகங்களை நடத்தினார். இந்நிலையில் சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற நாடகத்தில் உசிலை மணி நடித்து இருந்தார். இதன்பின் ஏ.வீரப்பனின் நகைச்சுவை வசனத்தில் டெல்லிக்குப் போறோம் வாரீயளா என்ற நகைச்சுவை நாடகத்தில் ஜொலித்தார்.

usilaimani, thyirvadai thesigan

மேடை நாடகங்களில் நடித்தவருக்கு திரை உலகமும் வரவேற்பு கொடுத்தது. யானை அசைந்து வருவதைப் போன்ற பாவனையில் இவர் நடந்து வருவார். இவர் குலுங்கி குலுங்கி சிரித்துப் பேசி தனது அங்கங்களையே நடிக்க வைத்துவிடுவார். எம்ஜிஆருடன் பெற்றால் தான் பிள்ளையா, கணவன், ஒளிவிளக்கு, ரகசிய போலீஸ் 115, கண்ணன் என் காதலன், குமரி கோட்டம், மாட்டுக்கார வேலன், ரிக்ஷாக்காரன், நீரும் நெருப்பும், ராமன் தேடிய சீதை, உரிமைக்குரல், இதயக்கனி, உழைக்கும் கரங்கள் ஆகிய படங்களில் நடித்துக் கலக்கினார். நம்நாடு படத்தில் கல்யாண புரோக்கராக வந்து கலகலப்பாக்கி விடுவார்.

நடிகர் திலகம் சிவாஜியுடன் மகாகவி காளிதாஸ், காவல் தெய்வம், பாதுகாப்பு, சவாலே சமாளி, நீதி, நான் வாழ வைப்பேன், கவரிமான், பட்டாக்கத்தி பைரவன், பரிட்சைக்கு நேரமாச்சு ஆகிய படங்களிலும் நடித்தார். ஏ.வீரப்பனின் கதை வசனத்தில் உருவான சோப்பு, சீப்பு, கண்ணாடி படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பினார்.

ரிக்ஷாக்காரன் படத்தில் குருக்களாகத் தோன்றி அசத்துவார். அதில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டும் தேங்காய் சீனிவாசனுடன் இணைந்து இவர் தோன்றும் காட்சி கலகலவென சிரிப்பை வரவழைக்கும்.

ரவிச்சந்திரனுடன் நாலும் தெரிந்தவன், அன்று கண்ட முகம், ஜெய்சங்கருடன் ஜீவனாம்சம், காலம் வெல்லும், ஜக்கம்மா, டி.ஆர்.ராமச்சந்திரனுடன் சாது மிரண்டால், ஜெமினிகணேசனுடன் என்ன முதலாளி சௌக்கியமா? சிவக்குமார், கமலுடன் இணைந்து சொல்லத்தான் நினைக்கிறேன், முத்துராமனுடன் இணைந்து நத்தையில் முத்து, மறுபிறவி, கமலுடன் சட்டம் என் கையில், சிம்லா ஸ்பெஷல், உயர்ந்த உள்ளம் ஆகிய படங்களிலும் நடித்தார். ரஜினியுடன் இணைந்து பில்லா படத்தில் நடித்தார்.

அதில் மனோரமாவைப் பார்த்து உசிலைமணி பட்டு கொஞ்சம் பக்கதிலே வர்றீயா என கேட்கும்போது ரசிகர்கள் திரையரங்கில் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அன்புக்கு நான் அடிமை, தனிக்காட்டுராஜா, அன்புள்ள ரஜினிகாந்த், டி.ராஜேந்தருடன் உயிருள்ள வரை உஷா, தங்கைக்கோர் கீதம். பிரபுவுடன் அறுவடை நாள், ஆனந்த், ராமராஜனுடன் எங்க ஊரு பாட்டுக்காரன், ராசாவே உன்னை நம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்து கொடிகட்டிப் பறந்தார் உசிலைமணி.

Published by
sankaran v

Recent Posts