உயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் போது எஸ்.வி.சுப்பையாவிடம் படபடவென எரிந்து விழுந்த சிவாஜி....ஏன் தெரியுமா?
உயர்ந்த மனிதன் படம் சிவாஜிக்கு மிகவும் பெயர் வாங்கிக் கொடுத்த படம். ஏவிஎம் தயாரிப்பில் வெளியான இந்தப்படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை பட அதிபர் சரவணன் சொல்வதைப் பார்ப்போம்.
உயர்ந்த மனிதன் படத்தைப் பற்றிச் சொல்லும்போது எங்களுக்கு மகிழ்ச்சி தந்த விஷயம் சிவகுமாருக்குக் கிடைத்த நல்ல ரோல்.
சிவகுமாருக்கு கேள்விக்கென்ன பதில் என்று ஒரு பாடல் உண்டு. முதலில் பாட்டை ஒலிப்பதிவு செய்து விட்டோம். பாடல் காட்சியை வெளிப்புறப் படப்பிடிப்பில் முடித்துக் கொண்டு வந்தோம். ஆனால் அப்பாவுக்குப் பாடல் காட்சி பிடிக்கவில்லை.
ஏனென்றால் கதையின்படி சிவகுமார் ஒரு படிக்காத பையன், காதலியோ காலேஜில் படித்த பெண் மாதிரி ஒரு கேரக்டர். அந்தக் காதல் காட்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் தொடாமல் நடித்தால் தான் அழகாக இருக்கும் என்று நினைத்தார் அப்பா.
ஆகவே மீண்டும் பாடலைக் கொஞ்சம் மாற்றி இசை அமைத்து அதே மாதிரி காட்சியையும் ரீ ஷாட் பண்ணினோம்.
உயர்ந்த மனிதனில் பாட்டின் நடுவில் வசனங்களோடு அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...என்ற பாடல். அப்போது புதுமை. இதற்குக் காரணமாக என் சகோதரர் குமரன் இருந்தார்.
அந்த நேரம் சென்னையில் புதுமையாக ஓடிக் கொண்டிருந்த ஆங்கிலப் படத்தை மெல்லிசை மன்னர் எம்எஸ்.வி.யை பார்க்கச் சொன்னார். அதில் ஒரு காட்சியில் வந்தது போல அந்த இன்ஸ்பிரேஷனை வைத்து பாட்டையும் வசனத்தையும் இணைக்குமாறு ஐடியா கொடுத்தார் குமரன்.
அதே போல பி.சுசீலா பாடிய நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா என்ற அருமையான பாடல் அவருக்கு அந்த ஆண்டு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. அதற்காக அவரைப் பாராட்டி விழா எடுத்தோம். லதா மங்கேஷ்கர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
படம் 125 நாள் ஓடிய பிறகு நாங்கள் 100வது நாள் விழா எடுத்தோம். உயர்ந்த மனிதன் தயாரிப்பில் இருந்தபோது இன்னொரு சுவையான சம்பவமும் நடைபெற்றது.
எஸ்.வி.சுப்பையா காவல் தெய்வம் படத்தை எடுத்துக் கொண்டு இருந்தார். சுப்பையாவுக்கு சிவாஜியின் கால்ஷீட் நாலைந்து நாள்கள் தேவைப்பட்டது. ஒருநாள் என்னிடம் வந்து அவரது சிரமத்தை சொன்னார். நான் சிவாஜியிடம் போய் கேட்டேன்.
அவங்களுக்குக் கொஞ்சம் உதவி செய்யுங்கள் என்றேன். அப்போது உயர்ந்த மனிதன் நடித்துக் கொண்டு இருந்தார் சிவாஜி. அவருக்கு தேதி இல்லை. அதனால் என்ன செய்வது என்று கேட்டார். உடனே எங்களுக்கு கொடுத்த தேதியில் 5 நாள்கள் அவங்களுக்குக் கொடுங்கள் என்றேன். அதன்படி செய்தார்.
ஒரு நாள் சுப்பையா சிவாஜிக்கு டிபன் கேரியரை கொடுத்து அனுப்பினார். சிவாஜி திறந்து பார்த்தார். முதல் அடுக்கில் டிபன் இருந்தது. அடுத்த அடுக்கில் 15000 ரூபாய் இருந்தது. சிவாஜிக்கு வந்ததே கோபம். என்னை அழைத்தார்.
என்னைப் பார்த்ததும் உங்க ஆச்சாரி செய்த வேலையைப் பாத்தீங்களா? என்று படபடவென வெடித்தார். சுப்பையாவை சிவாஜி ஆச்சாரி என்று தான் அழைப்பார். அந்த இடத்துக்குச் சுப்பையாவை வரவழைத்தோம். நான் விசாரித்ததில் காவல் தெய்வம் படத்திற்கு சிவாஜிக்குக் கொடுத்த சம்பளம் என்றார்.
எனக்கு நீங்க தர்றதாயிருந்தா எவ்வளவு தரணும் தெரியுமா? சரவணனைக் கேளுங்க. உயர்ந்த மனிதனுக்கு எனக்குத் தர்ற லட்சத்து 50 ஆயிரம் தரணும் என்றார் சிவாஜி.
சுப்பையாவுக்கு ஒன்றுமே ஓட வில்லை. நான் உங்களுக்குக்காக கால்ஷீட் தரவில்லை. சரவணனுக்காகத் தான் கொடுத்தேன் என்ற சிவாஜி அதன்பிறகு அந்த ரூபாயை வாங்கவே இல்லை.