19 வயதில் 60 வயது கிழவனாக நடித்த நடிகர்!.கடைசிவரை முதியவராகவே நடிக்க வைத்த திரையுலகம்!.
திரையுலகில் உன்னதமான நடிகர்களில் ஒருவரான வி.கே.ராமசாமி பாய்ஸ் நாடகக் கம்பெனியில் திரைத்துறைக்கு வந்தவர். அவர் திரையுலகில் காலடி எடுத்த வைத்த சம்பவமே கொஞ்சம் வித்தியாசமானது.
வி.கே.ராமசாமியின் பள்ளிப்பருவம்
அவரது பள்ளிப்பருவத்தில் வி.கே. ராமசாமி நன்றாக படிக்ககூடியவர். படிக்கும் போதே அவரது உறவினரின் நாடகக் கம்பெனியால் பெரிதும் ஈர்க்கப்பட்டு வீட்டை விட்டு மதுரைக்கு தனது 8ஆம் வகுப்பு வயதில் வெளியேறினார். வீட்டில் அவரை தேடி வர கடைசியாக ஒரு நாடகக் கம்பெனியில் அவரது தந்தையார் ராமசாமியை பார்த்து விட்டார்.
நாடகத்தில் தனக்கு இருக்கும் விருப்பத்தை எடுத்துக் கூற அவரது தந்தையும் சம்மதித்து விட்டார். ப. நீலகண்டன் எழுதிய ‘ நாம் இருவர் ’ என்ற நாடகத்தில் வி.கே.ராமசாமி ப்ளாக் மார்க்கெட் சண்முகம் பிள்ளை என்ற 60 கிழவனாக நடித்தார். அப்போது அவருக்கு வயது 19 தான்.
மெய்யப்பச்செட்டியார் அடைந்த அதிர்ச்சி
ஆனால் அவரின் நடிப்பு அந்த நாடகத்தில் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த நாடகத்தை பார்க்க ஏவிஎம்.மெய்யப்பச்செட்டியார் சில இயக்குனர்களுடன் வருகிறார் என்ற தகவல் அந்த நாடகக்கம்பெனிக்கு வர உடனே அந்த நாடகத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்கள் நடித்த கலைஞர்கள் மெய்யப்பச்செட்டியார் முன் நன்றாக நடித்தால் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என கருதி தயாராகி வந்தனர்.
மெய்யப்பச்செட்டியாரும் நாடகத்தை பார்த்து பிடித்து மேடையில் பேசும் போது அந்த நாடகத்தில் நடித்த சண்முகம் பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் நடித்த அந்த முதியவரை வரச்சொல்லுங்கள் என்று அழைக்க வி.கே.ராமசாமி என்ற இளைஞர் வந்தார். ஆனால் மெய்யப்பச்செட்டியாரோ இவர் இல்லை, அந்த முதியவர் என்று சொல்ல நீலகண்டன் இவர் தான் அந்த முதியவர் தோற்றத்தில் நடித்தார் என்று சொன்னதும் மெய்யப்பச்செட்டியாருக்கும் ஒரே ஆச்சரியம்.
முதல் படம்
உடனே நாம் இருவர் நாடகத்தை படமாக்க விரும்பிய மெய்யப்பச்செட்டியார் அந்த முதியவர் கதாபாத்திரத்திற்கு வி.கே. ராமசாமி தான் நடிக்க வேண்டும் என கூறி அவரை அழைத்துக் கொண்டார். இது தான் வி.கே.ராமசாமி சினிமாவில் அடியெடுத்து வைக்கும் முதல் படிக்கல். நாம் இருவர் படத்தில் நடிக்கும் போது ராமசாமிக்கு 21 வயது. ஆனால் 60 வயது கிழவனாக நடித்து அனைவரையும் வாயடைக்க வைத்திருப்பார்.
அதிலிருந்து வி.கே. ராமசாமி நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் முதியவர் தோற்றமாகவே இருந்தது. எம்ஜிஆர், சிவாஜி, பிரபு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் சேர்ந்து பல படங்களில் நடித்த பெருமை ராமசாமிக்கு உண்டு. மணிரத்னம், பாசில் போன்ற இயக்குனர்களின் ஆஸ்தான நடிகராக வலம் வந்தார் ராமசாமி.
மௌனராகத்தில் ஹிந்தி பண்டித்துடன் அவர் பேசிய காமெடி ஆகட்டும், அக்னி நட்சத்திரம் படத்தில் ஜனகராஜுடன் பலான படங்களை பார்க்கும் அந்த காட்சியில் அவர் செய்யும் லூட்டி ஆகட்டும் வேலைக்காரன் படத்தில் ரஜினியுடன் அவர் செய்யும் ரகளை ஆகட்டும் அனைவரையும் ரசிக்கும் படியாக வைத்தது. இப்படி அவர் நடிப்பில் பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.