Cinema News
வாடிவாசல் வாய்ப்பை தவறவிட்ட கௌதம் மேனன்?… ஃபர்ஸ்ட் பிளான் போட்டது இதுதானா?
வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த “விடுதலை” திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. “விடுதலை” திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இதுவரை காமெடியனாக மட்டுமே அறியப்பட்ட சூரியை கதாநாயகனாக நடிக்க வைத்து அவரை சரியாக கையாண்டிருக்கிறார் வெற்றிமாறன் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். அதே போல் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற கதாப்பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்.
“விடுதலை” திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன், “வாடிவாசல்” திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. அதில் நிஜ ஜல்லிக்கட்டு காளைகளை இறக்கி படமாக்கினார்கள். “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது முதலில் கலைப்புலி தாணு , கௌதம் மேனன்-சூர்யா காம்போவில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க முடிவுசெய்திருந்தாராம். ஆனால் கௌதம் வாசுதேவ் மேனன் கூறிய கதை முழுமையாக இல்லாத காரணத்தால் அந்த கதையை படமாக்க முடியாமல் போனதாம். இந்த சமயத்தில்தான் வெற்றிமாறன் “வாடிவாசல்” கதையோடு வந்திருக்கிறார். அக்கதை மிகவும் பிடித்துப்போக கலைப்புலி தாணு சரி என ஒப்புக்கொண்டுள்ளார்.
“வாடிவாசல்” திரைப்படம் சி.சு.செல்லப்பா எழுதிய “வாடிவாசல்” என்ற குறு நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படும் திரைப்படம். வெற்றிமாறன் இயக்கிய “விடுதலை” திரைப்படமும் ஜெயமோகன் எழுதிய “துணைவன்” சிறுகதையின் தழுவல்தான். இவ்வாறு தொடர்ந்து வெற்றிமாறன் பல நாவல்களை படமாக்கும் முயற்சிகளில் இறங்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.