“உங்க ஆதரவு எனக்கு தேவையில்லை”… எம்.ஜி.ஆரின் முகத்திற்கு நேராகவே கொந்தளித்துப் பேசிய வாலி…
எம்.ஜி.ஆர் நடித்த பல திரைப்படங்களுக்கு கவிஞர் வாலி பல ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார். “நான் ஆணையிட்டால்”, “புதிய வானம் புதிய பூமி” என காலம் கடந்து நிற்கும் பல பாடல்களை உதாரணமாக கூறலாம். வாலி என்றுமே மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். இந்த சுபாவத்தால் பலருடனும் அவருக்கு மனஸ்தாபங்கள் ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஒரு முறை எம்.ஜி.ஆர், வாலியின் பாடல்களை குறை கூற, அதற்கு வாலி எம்.ஜி.ஆரின் முகத்திற்கு நேராகவே கொந்தளித்துப் பேசிய ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.
ஒரு நாள் ஒரு படப்பிடிப்பின்போது வாலியை அழைத்த எம்.ஜி.ஆர் “நீங்கள் எனக்காக எழுதிய பாடலில் ஒரு பொருள் குற்றம் இருக்கிறது” என கூறி வாலி எழுதிய பாடல் வரிகளை படித்துக்காட்டினார். அதை முழுவதும் கேட்ட வாலி “இதில் எனக்கு எந்த குற்றமும் இருப்பதாக தெரியவில்லையே” என பதில் அளித்தார்.
உடனே எம்.ஜி.ஆர். வாலியிடம் “இந்த பாடலில் எந்த அர்த்தமும் இல்லை” என்றார். இதனை கேட்டவுடன் வாலிக்கு கோபம் தலைக்கேறியது. “உங்களுக்கு புரியவில்லை என்பதற்காக என் பாடலில் அர்த்தம் இல்லை என்று சொல்லாதீர்கள்” என வாலி, எம்.ஜி.ஆரிடம் கூறினார்.
அதன் பின் அங்கு இருந்த ஒரு தமிழ் பண்டிதரை அழைத்து அவரிடம் வாலி எழுதிய பாடல் பிரதியை கொடுத்த எம்.ஜி.ஆர் “இந்த பாடலில் எதாவது பொருள் இருக்கிறதா என்று படித்துப் பார்த்து கூறுங்கள்” என சொன்னார். அதன்படி அந்த தமிழ் பண்டிதர் அந்த பாடலை முழுவதுமாக படித்தப் பார்த்தார். அதன் பின் வாலியிடம் “இந்த பாடலில் அண்ணன் (எம்.ஜி.ஆர்) குறிப்பிட்டிருந்தது போல் பொருள் குற்றம் இருக்கத்தான் செய்கிறது” என கூறினார்.
இதனை கேட்ட வாலி அதிர்ச்சியடைந்தார். தமிழ் பண்டிதர் அவ்வாறு கூறியவுடன் எம்.ஜி.ஆர்., வாலியை பார்த்து “அப்புறம் என்ன வாலி, தமிழ் பண்டிதரே சொல்லிட்டாரு. இதுக்கு மேல என்ன வேணும்” என கூறிவிட்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்றுவிட்டாராம்.
எம்.ஜி.ஆர் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின் அந்த தமிழ் பண்டிதரிடம் வாலி “இப்போ எம்.ஜி.ஆர் இங்கே இல்லை. ஆதலால் தைரியமாக கூறுங்கள். என் பாடலில் நிஜமாகவே பொருள் குற்றம் இருக்கிறதா?” என கேட்டார். அதற்கு அந்த தமிழ் பண்டிதர் “நீங்கள் எழுதிய பாடலில் எந்த பொருள் குற்றமும் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆரை எதிர்த்து பேசாமல் இருப்பதுதான் நல்லது. நீங்கள் வேண்டுமென்றால் உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக அவரிடம் பேசிவிடலாம். ஆனால் அப்படி பேசிவிட்டு பின்னாளில் சங்கடத்தை வரவழைப்பதற்கு நான் விரும்பவில்லை” என கூறினார்.
இதையும் படிங்க: “என் படத்தை இப்போ ரிலீஸ் பண்ணிடாதீங்க”…. தயாரிப்பாளரிடம் கெஞ்சிய தனுஷ்… இவருக்கா இப்படி ஒரு நிலைமை??
அதன் பின் நேராக படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் சென்ற வாலி, எம்.ஜி.ஆரை பார்த்து “நீங்கள் சொன்னாலும் சரி, அந்த பண்டிதர் சொன்னாலும் சரி, இந்த பாடலில் எந்த பிழையும் இல்லை என்பதுதான் உண்மை. உங்கள் ஆதரவு வேண்டும் என்பதற்காக என்னுடைய மனசாட்சியை கழட்டிவைத்துவிட்டு உங்களிடம் பேசுவதற்கு நான் தயாராகவில்லை.
இந்த பாடல் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் வேறு பாடலை எழுதித்தருகிறேன். ஆனால் இந்த பாடலில் பொருள் குற்றம் இருக்கிறது என்று கூறினால் நான் நிச்சயம் ஏற்கமாட்டேன்” என கூறிவிட்டு படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டாராம்.
எனினும் இந்த சம்பவத்திற்குப் பின் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருந்த அந்த படத்தில் அந்த குறிப்பிட்ட பாடல் இடம்பெற்றது. மேலும் அந்த பாடல் உட்பட 4 பாடல்களை வாலி அத்திரைப்படத்திற்காக எழுதிக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதான் வாலிக்கும் எம்.ஜி.ஆருக்குமான புரிதல்.