ஏ.ஆர்.முருகதாஸ் மனதில் நினைத்ததை அப்படியே சொன்ன வாலி… அதிசயம் ஆனால் உண்மை!!

by Arun Prasad |   ( Updated:2022-10-10 15:45:29  )
ஏ.ஆர்.முருகதாஸ் மனதில் நினைத்ததை அப்படியே சொன்ன வாலி… அதிசயம் ஆனால் உண்மை!!
X

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு அஜித், லைலா, சுரேஷ் கோபி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “தீனா”. இத்திரைப்படத்தில் இருந்துதான் அஜித்திற்கு தல என்ற பட்டம் வந்தது.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “வத்திக்குச்சி பத்திக்காதுடா” பாடலில் மகாநதி ஷங்கர் அஜித்திடம் “தல இருக்கும்போது வால் ஆடக்கூடாது, நீ ஆடு தல” என்று கூறுவார். இதில் இருந்து “தல” என்ற பட்டம் அஜித்தை தொற்றிக்கொண்டது.

சமீபத்தில் கூட தன்னை “தல” என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் அஜித்குமார். ஆனாலும் ரசிகர்கள் அவரை தலயாகவே பார்க்கின்றனர். இந்த பட்டத்துக்கு காரணமாக இருந்த அந்த பாடலை எழுதியவர் வாலி.

“தீனா” திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்த சமயத்தில் அஜித்தின் இன்ட்ரோ பாடலை எழுதுவதற்காக வாலியிடம் சென்றிருக்கிறார் இயக்குனர் முருகதாஸ். அங்கே வாலியிடம் பாடல் எப்படி அமைய வேண்டும் என வாலியிடம் கூறியுள்ளார். அதற்கு வாலி “சில நாட்கள் கழித்து வா, பாடல் எழுதிவைக்கிறேன்” என கூறியுள்ளார்.

அதன் பின் பத்து நாள் கழித்து மீண்டும் வாலியை பார்க்க சென்றிருக்கிறார் முருகதாஸ். அப்போது வாலி “வத்திக்குச்சி பத்திக்காதுடா, யாரும் வந்து உரசுற வரையில” என பாடலின் முதல் வரியை கூறியிருக்கிறார். இதனை பார்த்த முருகதாஸ் எந்த ரியாக்சனும் காட்டாமல் வாலியை பார்த்தவாறே உட்கார்ந்திருந்திருக்கிறார்.

உடனே கோபமான வாலி “யோவ், இதுக்குதான்யா புது டைரக்டருக்கு பாட்டு எழுதக்கூடாதுங்குறது. நல்லா இருக்குன்னா நல்ல இருக்குன்னு சொல்லு, நல்லா இல்லைன்னா நல்லா இல்லன்னு சொல்லு. சும்மா செத்தவன் கையில் வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி உட்கார்ந்திருக்க” என கேட்டுள்ளார்.

அதற்கு முருகதாஸ் “அதாவது சார், படம் முழுக்க அஜித்குமார் வாயில் ஒரு குச்சியை வைத்துக்கொண்டே இருப்பார், இது எப்படி உங்களுக்கு தெரிந்தது” என கூறியுள்ளார். இது ஏ ஆர் முருகதாஸுக்கும் வாலிக்குமே அதிசயமாகத்தான் இருந்திருக்கிறது. இச்சம்பவத்தை வாலி, தனது மறைவுக்கு முன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Next Story