ஜோக் அடித்து எம்.ஜி.ஆரை கவுத்திப்போட்ட வாலி… புரட்சித் தலைவர் கிட்டயே இப்படியா??
“வாலிப கவிஞர்” என போற்றப்படும் வாலி, எம்.ஜி.ஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை டாப் நடிகர்கள் பலருக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை அவ்வப்போது அப்டேட் செய்துகொண்டவர் வாலி. ஆதலால்தான் அவரது வரிகள் எப்போது இளமையாகவே இருக்கின்றன.
கவிஞர் வாலிக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம் என அவருடன் பழகியவர்கள் பலரும் பல பேட்டிகளில் கூறியிருக்கின்றனர். வாலியுடன் பேசினால் பொழுது போவதே தெரியாதாம். அந்த அளவுக்கு பேசியே மயக்கிவிடுவாராம். இவ்வாறு தனது நகைச்சுவை உணர்வால் தன் மேல் கோபமாக இருந்த எம்.ஜி.ஆரையே ஒரு முறை கவிழ்த்திப்போட்டிருக்கிறார் வாலி.
எம்.ஜி.ஆர் நடித்த பல திரைப்படங்களுக்கு கவிஞர் வாலி பாடல்கள் எழுதியுள்ளார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஒரு முறை எம்.ஜி.ஆருக்கு வாலியின் மேல் ஒரு சின்ன மன வருத்தம் ஏற்பட்டதாம்.
ஆதலால் எம்.ஜி.ஆர் இயக்கி நடித்த “உலகம் சுற்றும் வாலிபன்” திரைப்படத்திற்கு வாலியை பாடல்கள் எழுத ஒப்பந்தம் செய்யவில்லையாம். இதனை தொடர்ந்து ஒரு நாள் எம்.ஜி.ஆரை சத்யா ஸ்டூடியோஸில் சந்திக்க வந்தார் வாலி.
அவரை பார்த்த எம்.ஜி.ஆர் மிகவும் சாதாரணமாக “என்ன விஷயம்?” என கேட்டார். அதற்கு வாலி “நீங்கள் உலகம் சுற்றும் வாலிபன் என்று ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதாக கேள்விபட்டேன்” என கூறினார்.
“ஆம், அதற்கு என்ன இப்போ?” என கேட்ட எம்.ஜி.ஆர், வாலி பேசத் தொடங்குவதற்கு முன்பே “இந்த படத்தில் உனக்கு வாய்ப்பு கிடையாது. இந்த படத்தில் நீ இல்லை” என கூறிவிட்டாராம்.
அதற்கு வாலி “நான் இந்த படத்தில் இல்லை என்றால், மக்கள் தப்பாக பேசுவார்கள்” என கூறினாராம். அதற்கு எம்.ஜி.ஆர் மிகவும் ஆவலாக “என்ன தப்பாக பேசுவார்கள்?” என கேட்டாராம்.
“உங்கள் படத்தினுடைய பெயர் உலகம் சுற்றும் வாலிபன். இதில் ‘வாலிபன்’ என்பதில் என்னுடைய பெயரை எடுத்துவிட்டால் ‘உலகம் சுற்றும் பன்’ என்றல்லவா ஆகிவிடும். இதனை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா?” என தனது பாணியில் நகைச்சுவையாக கூறினாராம் வாலி.
இதனை கேட்ட எம்.ஜி.ஆர் தன்னையறியாமலேயே விழுந்து விழுந்து சிரித்தாராம். வாலியின் மேல் உள்ள கோபம் சற்று தனிய “சரி, சரி போய் பாட்டெழுது போ” என கூறிவிட்டாராம் எம்.ஜி.ஆர். தனது நகைச்சுவை உணர்வால் கைவிட்டுப்போன வாய்ப்பை வாலிப கவிஞர் எப்படி திரும்ப பெற்றுள்ளார் பாருங்கள்.