எம்.ஜி.ஆர் படத்துக்கு வாய்ப்பு வாங்கித் தந்த பேர் தெரியாத நபர்… வாலிக்கு அடித்த யோகத்தை பாருங்க!!
வாலிபக் கவிஞர் என போற்றப்படும் வாலி, எம்.ஜி.ஆர் முதல் மிர்ச்சி சிவா வரை தமிழ் சினிமாவின் நான்கு தலைமுறை நட்சத்திரங்களுக்கு பாடல் எழுதியவர். குறிப்பாக எம்.ஜி.ஆர் திரைப்படங்களுக்கு வாலி எழுதிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை. “நான் ஆணையிட்டால்”, “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” போன்ற பல பாடல்களை உதாரணமாக கூறலாம்.
வாலி எழுதிய பாடல்
வாலி “அழகர் மலை கள்ளன்”, “சந்திரகாந்த்” போன்ற திரைப்படங்களுக்கு தொடக்கத்தில் பாடல்கள் எழுதினார். அந்த காலகட்டத்தில் வாலி, நாகேஷ், ஸ்ரீகாந்த், இசையமைப்பாளர் தாராபுரம் சுந்தர்ராஜன் ஆகியோருடன் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.
அப்போது தாராபுரம் சுந்தர்ராஜன் ஒரு நாள் தனது நண்பர் லட்சுமணனை சந்தித்தபோது, வாலி எழுதிய பாடலை முணுமுணுத்துள்ளார். அந்த பாடலை கேட்ட லட்சுமணன், “என்ன பாடல் இது?” என்று கேட்க, “எனது நண்பர் வாலி எழுதிய பாடல்” என கூறியிருக்கிறார்.
அதற்கு லட்சுமணன், “பாடல் நன்றாக இருக்கிறது. நிச்சயமாக இவருக்கு ஒரு வாய்ப்பு வாங்கித் தர வேண்டும்” என கூறினாராம்.
நல்லவன் வாழ்வான்
தாராபுரம் சுந்தர்ராஜனின் நண்பரான லட்சுமணன், அப்போது பிரபல இயக்குனராக திகழ்ந்த ப.நீலகண்டனிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் ப.நீலகண்டன் எம்.ஜி.ஆரை வைத்து “நல்லவன் வாழ்வான்” என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார்.
1961 ஆம் ஆண்டு ‘நல்லவன் வாழ்வான்” திரைப்படம் உருவாயிற்று. இத்திரைப்படத்திற்கு சி.என்.அண்ணாதுரை வசனம் எழுதியிருந்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ராஜ சுலோக்சனா நடித்திருந்தார்.
வாலிக்கு வந்த வாய்ப்பு
லட்சுமணன் சொன்னபடி இயக்குனர் ப.நீலகண்டனிடம் “வாலி என்றொரு கவிஞர் இருக்கிறார். நன்றாக பாடல் எழுதிகிறார். அவரை பயன்படுத்தலாம்” என கூறினாராம். உடனே படக்குழுவினர் வாலியை அழைத்து, எம்.ஜி.ஆருக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
இதையும் படிங்க: மீண்டும் கூட்டு சேரும் அந்த தோல்வி காம்போ… கச்சிதமாக கணக்கு போடும் சந்தானம்… ஒஹோ இதுதான் விஷயமா??
இந்த திடீர் வாய்ப்பை வாலி எதிர்பார்க்கவில்லை. யார் நமக்கு இந்த வாய்ப்பை வழங்கியது என்று கூட வாலிக்கு தெரியாதாம். இத்திரைப்படத்தின் பாடல் ஒலிப்பதிவு முடிந்த பிறகு ப.நீலகண்டனிடம் “நான் ஒன்னு கேட்குறேன். தப்பா நினைச்சிக்காதீங்க. எனக்கு யார் இந்த வாய்ப்பை வாங்கிக்கொடுத்தார் என்று தெரிந்துகொள்ளலாமா?” என வாலி கேட்டிருக்கிறார். அப்போது ப.நீலகண்டன் தனது உதவியாளரான லட்சுமணனை கைக்காட்டி “இவர்தான்” என கூறினாராம். லட்சுமணனை பார்த்த வாலி, மனம் நிறைந்த நெகிழ்ச்சியோடு அவருக்கு நன்றி கூறினாராம்.