கண்ணதாசன் எழுதின பாட்டுக்கு வாலி பெயர்!.. எம்.ஜி.ஆர் படத்தில் நடந்த அந்த சம்பவம்...
எம்.ஜி.ஆர் எப்படி நாடகங்களில் நடித்து அப்படியே சினிமாவில் நுழைந்து படிப்படியாக முன்னேறி பெரிய கதாநாயகனாக மாறினாரோ அப்படி ஒருபக்கம் கண்ணதாசனும் சினிமாவில் வெவ்வேறு பெயர்களில் நடிக்க வாய்ப்பு தேடி பின் அது கிடைக்காமல் பத்திரிக்கைகளில் எழுத துவங்கி பின்னர் சினிமாவுக்கு வந்தார்.
துவக்கத்தில் பல படங்களுக்கு கதை, வசனம், பாடல்களை கண்ணதாசன் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன், மகாதேவி, நாடோடி மன்னன், மன்னாதி மன்னன், திருடாதே ஆகிய படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர். இதனால், எம்.ஜி.ஆருக்கு அவருக்கு நெருங்கிய நட்பு உண்டு.
இதையும் படிங்க: நாள் முழுக்க தூங்கி கொண்டே இருந்த கண்ணதாசன்!. கடுப்பில் கத்திய எம்.எஸ்.வி.. வந்ததோ சூப்பர் பாட்டு!..
எம்.ஜி.ஆரை மக்களிடம் கொண்டு போன ‘அச்சம் என்பது மடமையடா’.. உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உள்ளிட்ட பல பாடல்களை கண்ணதாசன் எழுதியிருக்கிறார். ஆனால், அரசியல் செயல்பாடுகளால் இருவரின் நட்புக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. கண்ணதாசன் காங்கிரஸை ஆதரித்தவர். எம்.ஜி.ஆரோ திமுகவில் இருந்தார். எனவே, அரசியல் மேடைகளில் ஒருவரை ஒருவர் விமர்சிக்கும் நிலை ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆரின் படங்களுக்கு பாடல் எழுதுவதை கண்ணதாசன் நிறுத்திவிட்டார். அப்போது வாலி எம்.ஜி.ஆருக்கு பாடல்களை எழுதினார். எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு வாலியே பாடல்களை எழுதினார். ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்து 1974ம் வருடம் வெளிவந்த திரைப்படம் உரிமைக்குரல்.
இதையும் படிங்க: நடிகர் திலகம் சிவாஜியை கோபப்படுத்திய கண்ணதாசன் பாட்டு!.. நடந்தது இதுதான்!..
இந்த படத்தில் ‘விழியே கதை எழுது’ என்கிற பாடலை கண்ணதாசன் எழுதிவிட்டார். ஆனால், கண்ணதாசன் எழுதினார் என்று தெரிந்தால் எம்.ஜி.ஆர் கோபப்படுவார் என சிலர் சொல்ல இது பற்றி கண்ணதாசனிடம் பேசினார் ஸ்ரீதர். கண்ணதாசன் பெருந்தன்மையாக ‘பரவாயில்லை அந்த பாடலில் என் பெயரை போட வேண்டாம்’ என சொல்லிவிட்டார். எனவே, இசைத்தட்டில் அந்த பாடலை எழுதியவது வாலி என போடப்பட்டது.
ஆனால், அந்த பாடல் வரிகளை படித்து பார்த்த எம்.ஜி.ஆர் ‘இது வாலி எழுதியது போல் இல்லையே.. கண்ணதாசன் எழுதியது போல் இருக்கிறது’ என கேட்க ஸ்ரீதர் நடந்ததை சொல்லிவிட்டார். அதற்கு எம்.ஜி.ஆர் ‘இது தவறு. ஒருவர் எழுதிய பாடலுக்கு இன்னொருவர் பெயரை போடக்கூடாது.. படத்தில் அவரின் பெயரை போடுங்கள்’ என சொல்ல டைட்டிலில் அந்த பாடலுக்கு கண்ணதாசன் பெயர் போடப்பட்டது.
இப்படி எம்.ஜி.ஆரும் கண்ணதாசனும் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்கும் அளவுக்கு மனதளவில் நட்பும், மரியாதையும் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 3 நாளாகியும் பாட்டு வரல.. திட்டிய தயாரிப்பாளர்!.. கோபத்தில் கண்ணதாசன் சொன்ன வரிகள்!..