வாலி ஆசையாய் வரைந்த ஓவியம்... பங்கமாய் கலாய்த்துத் தள்ளிய தமிழக முதல்வர்… அடப்பாவமே!!
வாலிப கவிஞர் என அழைக்கப்படும் வாலி, தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ளர். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் வாலி. காலத்திற்கு ஏற்றார் போல் தன்னை எப்போதும் அப்டேட் செய்துகொண்டவர் வாலி. ஆதலால்தான் அவரால் எம்.ஜி.ஆருக்கு ஹிட் பாடல்களை எழுத முடிந்தது போல் சிவகார்த்திகேயனுக்கும் எழுதமுடிந்தது.
கவிஞர் வாலி இளமைப் பருவத்தில் ஓவியம் வரைவதில் மிகுந்த ஈடுபாடுகொண்டு, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அதன் பின் தனக்கு ஓவியம் எல்லாம் சரிபட்டு வராது என முடிவு செய்து ஒரு கட்டத்தில் அப்பயிற்சியை நிறுத்திக்கொண்டார். இதனை வாலி, தனது பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தனது மறைவுக்கு முன்பு கிரேசி மோகனுடன் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது, தான் சிறு வயதில் வரைந்த ஓவியத்தை அப்போதைய முதல்வர் ராஜாஜி கேலி செய்த ஒரு சம்பவத்தை குறித்து பகிர்ந்துள்ளார்.
“ராஜாஜியும் காமராஜரும் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்தபோது, ஒரு ஸ்டேஷனில் ஐந்து நிமிடங்கள் ரயில் நின்றது. நான் ஏற்கனவே வரைந்து வைத்திருந்த ராஜாஜி, காமராஜர் ஓவியங்களை அவர்களிடம் காட்டவேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு காங்கிரஸ்காரரிடம் என்னை அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள் என கேட்டேன்.
அவர் என்னை அழைத்துச்செல்ல ஒப்புக்கொண்டார். அதன்படி அந்த ரயிலுக்குள் இருந்த ராஜாஜியிடமும் காமராஜரிடமும் என்னை அழைத்துச்சென்றார் அந்த காங்கிரஸ்காரர். நான் வரைந்திருந்த ராஜாஜி ஓவியத்தை ராஜாஜியிடம் காட்டினேன். அவர் என் ஓவியத்தை பார்த்துவிட்டு அதில் ‘ராஜகோபாலச்சாரி’ என கையெழுத்திட்டார். அவர் எப்போதுமே ‘இராஜகோபாலச்சாரி’ என்றுதான் கையெழுத்திடுவார். ஆனால் என்னுடைய ஓவியத்தில் அவர் ‘ராஜகோபாலச்சாரி’ என்று கையெழுத்திட்டிருந்தார்.
‘உங்கள் கையெழுத்தை நான் இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். இது உங்கள் கையெழுத்து மாதிரியே இல்லையே’ என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘இந்த ஓவியத்தை பார்த்தால் கூடத்தான் என்னைப் போல் இல்லை. அதனால்தான் கையெழுத்தும் என் கையெழுத்து போல் இல்லை’ என கூறிவிட்டார்.
அதன் பிறகு நான் வரைந்த காமராஜர் ஓவியத்தை காமராஜரிடம் காட்டினேன். அவர் என் ஓவியத்தில் “கு.காமராஜ்” என அழகாக கையெழுத்துப்போட்டுக் கொடுத்தார். நான் ரயிலில் இருந்து இறங்கிய பிறகு, காமராஜர் அங்கிருந்த ஒருவரிடம், ‘இந்த ஓவியமும் என்னை போல் இல்லை. ஆனால் சின்ன பையன். வருத்தப்படப்போகிறான் என்றுதான் கையெழுத்துப்போட்டுக் கொடுத்தேன்’ என்றாராம். இதுதான் ராஜாஜிக்கும் காமராஜருக்கும் உள்ள வித்தியாசம்” என அப்பேட்டியில் வாலி கூறியுள்ளார்.