வசூலை வாரிக்குவிக்கும் வாழை... 3 நாளில் இத்தனை கோடியா?...
மாரிசெல்வராஜ் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வெற்றி நடை போட்டு வருகிறார். நாலு படங்களை இயக்கினாலும் ரசிகர்களின் மனதில் நச்சென்று பதிந்து விட்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை அவர்களோடு வாழ்ந்தவராக சொல்வதால் அது எளிதில் ரசிகர்களை சென்று அடைகிறது.
அப்படி ஒரு கதை தான் வாழை. இந்தப் படத்திற்கு தற்போது ரசிகர்களிடம் இருந்து மட்டுமல்லாமல் சாதாரண மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் ஆகியோரின் நடிப்பு அற்புதம்.
இயக்குனர்கள் பாலா படத்தைப் பார்த்ததும் மாரிசெல்வராஜூக்கு முத்தம் கொடுத்து பாராட்டியுள்ளார். பாரதிராஜாவும் பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 23ம் தேதி படம் ரிலீஸானது. முதல் 2 நாள்களில் 3.65 கோடிகளை வசூலித்துள்ளது. 3வது நாளில் 4 கோடியைத் தொட்டது. இதுவரை மொத்தம் 7.65 கோடி வசூலாகியுள்ளதாம்.
இன்றைய தமிழ்சினிமாவைப் பொருத்தவரை படத்தின் நாயகர் முக்கியமல்ல. நல்ல கதையைத் தாருங்கள். நாங்கள் ஓட்டுகிறோம் என ரசிகர்கள் சொல்வது போல உள்ளது. அந்தக் கருத்தை இந்த வாழை படம் நிரூபணம் ஆக்கியுள்ளது என்றே சொல்லலாம்.
படத்தைத் தயாரித்தவர் சஜித் சிவானந்தன். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் வாழைத்தோட்டங்கள் அப்படியே கண்முன் செழுமையாக பச்சைப் பசேல் என்று காட்சி அளிக்கிறது. வழக்கமான மசாலா படங்களையேக் கண்டுகளிக்கும் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு வாழை படம் புதுவிதமான உணர்வைத் தரும்.
இயக்குனர் மாரிசெல்வராஜின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் புளியங்குளம். இவர் தாமிரபரணி தண்ணீரைக் குடித்து வளர்ந்தவர் என்பதால் அங்குள்ள மக்களின் அன்றாடப் பிரச்சனைகளும், வலிகளும் நன்றாகத் தெரியும். அவரே தனது கஷ்டகாலத்தில் பல வேலைகளைச் செய்துள்ளார். அந்த வகையில் சினிமாவிற்கு வந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய பிறகு தான் தனது வீட்டிற்கு ரெஸ்ட் ரூமே கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.