வட சென்னை பார்ட் 2 தயார்?- ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல இசையமைப்பாளர்…
கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த “வட சென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மிகவும் யதார்த்தமான மற்றும் வித்தியாசமான திரைக்கதை கொண்ட கேங்கஸ்டர் வகையறா திரைப்படமாக இது அமைந்தது. இதில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆன்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலரும் நடித்திருந்தனர்.
“வட சென்னை” திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இவரின் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. குறிப்பாக “என்னடி மாயாவி நீ”, “கோவிந்தமாவால” போன்ற பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. அதே போல் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பின்னணி இசையும் இத்திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது.
“வட சென்னை” திரைப்படத்தின் கிளைமேக்ஸில் “வட சென்னை 2, அன்புவின் எழுச்சி” என்று அடுத்த பாகத்திற்கான அறிவிப்போடுதான் அதனை முடித்திருப்பார்கள். ஆதலால் “வட சென்னை பார்ட் 2” திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் “வட சென்னை” இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
இது குறித்து வெற்றிமாறனிடம் பல முறை கேட்கப்பட்டது. குறிப்பாக “வாத்தி” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷிடம் கேட்கப்பட்டது. அதற்கு தனுஷ், “வட சென்னை 2 நிச்சயம் வெளிவரும்” என கூறினார். “வட சென்னை” திரைப்படம் வெளிவந்து 5 வருடங்கள் ஆகின்றன. “வட சென்னை” திரைப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன், “அசுரன்”, “விடுதலை பாகம் 1” ஆகிய திரைப்படங்களை இயக்கிவிட்டார். தற்போது “விடுதலை பாகம் 2” திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்திக்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “வெற்றிமாறன் அமீரின் கதாப்பாத்திரத்தை மட்டும் வைத்தே ‘ராஜன் வகையறா’ என்ற திரைப்படத்தை 2 மணி நேரங்கள் உருவாக்கி தயாராக வைத்திருக்கிறார். அந்த திரைப்படத்தை வெற்றிமாறன் வெளியிட வேண்டும்” என்று அப்பேட்டியில் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: என்ன மீறி நடிக்கிறியா நீ!.. சக நடிகரை ஓங்கி அறைந்த வடிவேலு…