அவரு இல்லாம நான் இல்ல.. மனதை மாற்றிக்கொண்ட வடிவேலு...
இம்சை அரசன் 24ம் புலிகேசி பட பிரச்சனையால் வடிவேலுவுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது. எனவே, வடிவேலு கடந்த 4 வருடங்களாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது அந்த பிரச்சனை முடிந்து வடிவேலு மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார். காமெடி படங்களை இயக்கி வரும் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் புதிய படத்திற்கு ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’என்கிற தலைப்பு வைத்துள்ளனர். இது தொடர்பான போஸ்டரும் வெளியானது.
இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் ‘சில படங்களில் ஹீரோவாக நடிக்கிறேன்.. மேலும், முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாகவும் நடிப்பேன்’ என கூறினார் வடிவேலு. இதை நம்பி ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சிலர் அவரை தொடர்பு கொண்டு எங்கள் படங்களில் நீங்கள் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள் ஆனால், அவர்களுக்கு சாதகமான பதிலை வடிவேலு இதுவரை கூறவில்லை.
சந்தானம் போல இனிமேல் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவெடுத்ததே அதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. ஆனால், இதை அவர் வெளியே யாரிடமும் கூறவில்லை. சிவகார்த்திகேயன் தனது டான் படத்தில் அவரை நடிக்க வைக்க விரும்பினார். ஆனால், அது நடக்கவில்லை. ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2-வில் வடிவேலுவை நடிக்க விரும்புகிறார். இது நடக்குமா என தெரியவில்லை.
ஆனால், மாரிசெல்வராஜ் - உதயநிதி கூட்டணியில் உருவாகவுள்ள புதிய படத்தில் காமெடியனாக நடிக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சமீபத்தில் உதயநிதியை நேரில் அவர் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படமும் இணையத்தில் வெளியானது. இதற்கு காரணமும் இருக்கிறது.
வடிவேல் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதற்கு உதயநிதி ஸ்டாலின் பங்கும் இருக்கிறது. அதோடு, அவர் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்பதால் அவர் படத்தில் காமெடியனாக நடிக்க அவர் சம்மதம் கூறிவிட்டது தெரியவந்துள்ளது.