Connect with us

Cinema News

வடிவேலு ஆரம்பத்தில் கலக்கிய பாடி லாங்வேஜ் காமெடிகள்

வடிவேலுவின் பாடி லாங்வேஜ் பேச்சு இவைகளை பார்த்துதான் நடிகர் இயக்குனர் ராஜ்கிரண் சினிமாவில் அவரை அறிமுகப்படுத்தினார்.

இன்று காமெடி லெஜண்டாக வளர்ந்துவிட்ட வடிவேலு பத்து பதினைந்து வருடங்களுக்கும் மேல் படங்களில் செய்து வரும் காமெடி ஊரறிந்தது உலகறிந்தது. தனக்கென்று ஒரு குரூப் அமைத்து படங்களில் தனி காமெடி டிராக் செய்தார்.

சிங்கமுத்து, முத்துக்காளை, தியாகு, மனோபாலா,போண்டா மணி, நெல்லை சிவா, சாம்ஸ் என பலர் அந்த காமெடி கூட்டணியில் இருந்தனர். அது போன்ற காமெடிகள்தான் பெரும்பாலும் 90ஸ் கிட்ஸ் 2 கே கிட்ஸ்களுக்கு தெரிகின்றன. ஆனால் வடிவேலு நடிக்க வந்த முதல் 10 வருடத்தில் செய்த காமெடிகள் மிக புகழ்பெற்றவை.

வெறும் பாடி லாங்வேஜிலேயே வடிவேலு அந்த காமெடிகளில் கலக்கி இருப்பார்.

தேவர் மகன் படத்தில் கமல் பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு கெளதமியோடு சொந்த ஊருக்கு வந்து இறங்கும்போது அவரை வரவேற்று ஆடிக்கொண்டே வருவார் பாருங்க ஒரு கெட்ட ஆட்டம் போட்டிருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும். இளையராஜா இசையமைத்த அந்த கலக்கலான பின்னணி இசைக்கு டான்ஸில் தெறிக்க விடுவார் பார்க்க காமெடியாகவும் இவ்வளவு கலக்கலா டான்ஸ் ஆடுறாரே என நம்மை திகைக்க வைக்கும்.

அதே போல் சிங்கார வேலன் படத்தில் வடிவேலு அதிகம் டயலாக் பேச மாட்டார் சின்ன சின்ன அசைவுகள் அவரின் கெட் அப்களிலேயே சிரிக்க வைப்பார்.

வித்தியாசமான காமெடிகளில் வடிவேலுவை முதன் முதலில் களமிறக்கியது இயக்குனர் பாரதிராஜாவாகத்தான் இருக்கும். அவரின் கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன் உள்ளிட்ட படங்களில் வடிவேலு ஒல்லியான தேகத்துடன் அதிரடியாக காமெடி செய்து இருப்பார்.

கிழக்கு சீமையிலே படத்தில் வரும் டீக்கடையில் ஒருவரை போட்டு அடிக்கும் காமெடி, தேவையில்லாமல் ஜெயிலுக்கு அடிக்கடி சென்று வரும் ரவுடி ஒருவரிடம் ஜெயில் பறவைடா நாங்க என வசனம் பேசி அவரிடம் அடிவாங்கும் காமெடி போன்றவை வேற லெவலில்தான் இருக்கும்.

அதே போல் பாரதிராஜாவின் பசும்பொன் படத்தில் கொடுத்த கடனை திரும்ப வாங்க செல்லும் வடிவேலு கடன் வாங்கிய ரவுடி முகத்தை கழுவிக்கொண்டு இருக்க, காச வாங்கிட்டு திருப்பி தராத கடன்கார நாய்க்கு முக அலங்காரம் கேட்குது என பேசிக்கொண்டே சென்று அந்த கடன் கொடுத்தவரிடமே சரணடைவது வேற லெவல் காமெடிகள்.

அதே போல் பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா படத்திலும் கால்நடை மருத்துவரின் கம்பவுண்டராக காமெடியில் கலக்கி இருப்பார். யார் நம்மோட டாக்டர் என தெரியாமலேயே டாக்டராக வரும் ராஜாவிடம் பஸ்ஸிலேயே வம்பிழுப்பது பின்பு உண்மை தெரிந்து அவரிடம் சரண்டராவது, அது போல ஊருக்கு வரும் கதாநாயகி மகேஸ்வரியிடம் சோளக்காட்டு பொம்மையை காட்டி என்னோட சேவையை பாராட்டி ஊர்க்காரய்ங்க என சிலை வைச்சிருக்காய்ங்க என பீலா விடுவது என கலக்கி இருப்பார்.

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வந்த காதலன் திரைப்படத்திலும் வடிவேலுவின் பாடி லாங்வேஜ் காமெடிகள் சிரிக்க வைக்கும். கவர்னர் வீட்டில் கோவணத்தை அவிழ்த்து காட்டுவது, பெண்களின் பரிமாண வகைப்படி அவர்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம் என ஜில் ஜங் ஜக் என மூன்று பேர் சூட்டுவது என காமெடியில் வடிவேலு கலக்கி இருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அது போல பாரதிராஜாவின் சீடரான இயக்குனர் சீமான் இயக்குனர் பாரதிராஜாவின் படங்களில் வரும் வடிவேலுவின் காமெடி போலவே இருக்க வேண்டும் என முயற்சி செய்து அவரின் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் வடிவேலுவை நன்றாக யூஸ் செய்திருப்பார். நாளக்கழிச்சு ஊருக்கு போறேன் சின்னம்மா மகளுக்கு சடங்கு என சொல்லிவிட்டு கடையில் இருந்து நகரும்போது ஒருவர் முறைத்துக்கொண்டு இருக்க அவரை பார்த்து வடிவேலு முறைக்கவும் முடியாமல் அதை கடந்து செல்லவும் முடியாமல் பாடி லாங்வேஜிலேயே காமெடி செய்வது அற்புதமாக இருக்கும். அது போல இப்படத்தில் தன்னை துரத்துவதாக நினைத்துக்கொண்டு தேவையில்லாமல் ஓடுவது, சுருண்டு கிடக்கும் பாயை நிமிர்த்துகிறேன் என அதில் விழுந்து மூக்கை உடைத்துகொள்வது என கலக்கலான அவரின் பாடி லாங்வேஜ் காமெடிகள் இந்த படத்திலும் புகழ்பெற்றவை.

இது போல முரளி நடித்த அதர்மம் படத்தில் மது குடித்துவிட்டு யார்றா போக்கிரி, யார்றா போக்கிரி என தகராறு செய்து அடிவாங்குவது போன்ற காமெடிகளையும் மறக்க முடியாது.

சக்தி படத்தில் சாய்ங்காலம் சாய்ங்காலம் யானைக்கு சண்டை சொல்லித்தர வேண்டியதிருக்கு என சொல்லி மிரட்டுவது, இதெல்லாம் டீயா என டீக்கடைக்காரர் திருப்பூர் ராமசாமியை மிரட்டுவது என கலக்கி இருப்பார்.

சக்தி படத்தில் வடிவேலுவின் பாடி லாங்வேஜ் காமெடிகள் ரொம்பவும் நன்றாக இருக்கும். வெறும் பச்சைத்தண்ணியை குடித்து விட்டு தான் மது குடித்துவிட்டதாக நினைத்து சலம்பல் செய்து மயில்சாமியிடம் அடிவாங்குவது எல்லாம் தாறு மாறு ரக காமெடி என்றே சொல்லலாம்.

அது போல ராஜ்கிரண் இயக்கத்தில் வந்த அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் வடிவேலுவின் காமெடி தூக்கலாக இருக்கும்.

கோடி ரூபாய் கொடுத்தாலும் முகஸ்துதிக்காக யாரிடமும் நான் பேசமாட்டேன் என அடிக்கடி டயலாக் பேசும் வேடத்தில் எல்லாமே என் ராசாதான் படத்தில் நடித்திருப்பார். சங்கீதாவிடம் நகையை ஏமாற்றி வாங்கி அதை அடகு வைத்து காது , கழுத்து என பணத்துடன் தெனாவட்டாக திரியும் கலக்கலான வேடத்தில் இப்படத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் வடிவேலுவின் காமெடிகள் இன்றும் ரசித்து சிரிக்க வைக்கும்.

இது போல பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் படத்திலும் வடிவேலு காமெடியில் கலக்கி இருப்பார். பிரபுதேவாவுக்கும் வடிவேலு காமெடிக்கும் கெமிஸ்ட்ரி அவ்ளோ சூப்பரா ஒர்க் அவுட் ஆகும். லண்டன் சென்ற வடிவேலு ஊ ஆர் யூ என இங்க்லீஷ்காரன் கேட்கும் கேள்வியை வைத்து அதையே பாடலாக பாடுவது வேற ரக காமெடிகளாகும்.

கதிர் இயக்கிய காதல் தேசம் படத்தில் கல்லூரி மாணவராக ஓடுற பஸ்ஸில் ஏறுவது ஓடுற பஸ்ஸில் இறங்குவது, பஸ்ஸில் ஏறி யாராவது என்னை காதலிங்க என ஸ்டைலாக விண்ணப்பம் கொடுப்பது போன்ற காமெடிகளை ரசித்து சிரிக்கலாம்.

வடிவேலுவை வேற லெவல் காமெடி செய்து நம்மை ரசிக்க வைத்தவர் இயக்குனர் வி.சேகர். இவரின் படங்கள் எல்லாம் வடிவேலு காமெடி பார்க்க அற்புதமாக இருக்கும். வரவு எட்டணா செலவு பத்தணாவில் இவரது காமெடி நன்றாக இருக்கும். தொடர்ந்து வி சேகர் தன் படங்களான காலம் மாறி போச்சு, வரவு , விரலுக்கேத்த வீக்கம், பொங்கலோ பொங்கல் படங்களில் வடிவேலுவுக்கு வாய்ப்பு தந்து அவரை காமெடியின் உச்சத்தில் ஏற்றி விட்டார். கவுண்டமணி கோவை சரளா, செந்தில் கோவை சரளா என்று இருந்த ஜோடியை வி. சேகர்தான், வடிவேல், கோவை சரளா என்று சொல்லும்படியாக மாற்றினார்

எதற்காக இவ்வளவு காமெடி காட்சிகளை நியாபகப்படுத்தி எழுதப்பட்டுள்ளதென்றால், வடிவேலுவின் ஆரம்ப கால காமெடிகள் இப்போதும் அவரை திரையில் பார்த்த உடனே சிரிக்க வைக்கும். குறிப்பாக 92 ம் வருடத்தில் இருந்து 2000ம் ஆண்டு வரை வடிவேலுவின் காமெடிகள் வேறு தரத்தில் இருக்கும் அதற்கு பின்பு படத்தில் தனி காமெடி டிராக் ஆக செய்தார். ஒல்லியான தேகத்துடன் படத்தில் தனி டிராக் ஆக இல்லாமல் படத்தின் கதையோடு சேர்ந்து பயணித்த வடிவேலுவின் ஆரம்ப கால காமெடிகள் இன்றும் ரசித்து சிரிக்கலாம் திரையில் அவரின் உருவத்தை பார்த்த உடனே இவை சிரிப்பை வரவைத்த காமெடிகளாகும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top