வடிவேலு-தனுஷ் இணைந்த ஒரே படம்.. சண்டையில் முடிந்த படப்பிடிப்பு.. இதெல்லாம் நடந்திருக்கா??
தமிழின் நகைச்சுவை புயலான வடிவேலு ரஜினி, கமல், அஜித், விஜய் என டாப் நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கியுள்ளார். எனினும் இதுவரை தனுஷுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட நடித்ததில்லை.
ஆனால் வடிவேலு தனுஷுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்தார். ஆம்! 2009 ஆம் ஆண்டு தனுஷ், தமன்னா, விவேக் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த திரைப்படம் “படிக்காதவன்”. இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்தது விவேக்கின் காமெடிதான். “அசால்ட் ஆறுமுகம்” என்ற கதாப்பாத்திரத்தில் விவேக், ஒரு காமெடி கேங்கஸ்டராக நகைச்சுவையில் வெளுத்துவாங்கியிருந்தார்.
தனுஷ்-விவேக் காம்போ அதன் பின் “உத்தமபுத்திரன்”, “மாப்பிள்ளை”, “விஐபி” என தொடர்ந்தது. எனினும் “படிக்காதவன்” திரைப்படத்தில் முதலில் காமெடி ரோலுக்கு ஒப்பந்தம் ஆனது வடிவேலு தான்.
மேலும் தனுஷும் வடிவேலுவும் இடம்பெறும் காமெடி காட்சிகள் பலவும் எடுக்கப்பட்டது. ஆனால் வடிவேலு ஒரு நாள் படப்பிடிப்பின் போது தனுஷ் கூறிய ஒரு வார்த்தையால் கடும் கோபம் அடைந்தாராம். இச்சம்பவத்தை நகைச்சுவை நடிகர் மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதாவது, “படிக்காதவன்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஓர் நாள் வடிவேலு, இயக்குனர் சொல்வது போல் சரியாக நடிக்கவில்லையாம். பல டேக்குகள் இவ்வாறு வீணாக சென்றிருக்கிறது. இதனை கவனித்த தனுஷ், வடிவேலுவிடம் “இயக்குனர் சொல்வது போல் நடிங்க” என கூறியிருக்கிறார்.
இதனால் வடிவேலு கோபம் கொண்டாராம். அந்த நாள் படப்பிடிப்பு முடிந்தபிறகு “சந்திரமுகியில் தனுஷின் மாமனாருக்கே நான் தான் நடிப்பு சொல்லிகொடுத்தேன். இவர் என் கிட்ட எப்படி நடிக்கனும்ன்னு சொல்றாரு பாரு” என கூறியிருக்கிறார். ஒருவேளை இந்த சம்பவம் தான் “படிக்காதவன்” திரைப்படத்தில் இருந்து வடிவேலு விலகியதற்கு காரணமாக இருந்திருக்குமோ??