நம்மள விட அதிகமா ஸ்கோர் செஞ்சிடுவான் போலயே- சக காமெடி நடிகரை பிளான் பண்ணி கவிழ்த்த வடிவேலு…
வடிவேலு தமிழ் சினிமாவின் மிக புகழ் பெற்ற காமெடி நடிகராக திகழ்ந்து வருகிறார் என்பது பலரும் அறிந்த ஒன்றே. தமிழ் சினிமா உள்ளவரை வடிவேலுவின் நகைச்சுவையும் நிலைத்து நிற்கும். அந்தளவுக்கு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவராக திகழ்கிறார் வடிவேலு.
எனினும் சமீப காலமாக அவருடன் நடித்த சக காமெடி நடிகர்கள் அவரை குறித்து மிக கடுமையாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட காமெடி நடிகரான கொட்டாச்சி, வடிவேலுவுடன் நடித்த போது நடந்த சம்பவம் ஒன்றை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு விஜயகாந்த், சௌந்தர்யா, வடிவேலு, உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “தவசி”. இத்திரைப்படத்தை கே.ஆர்.உதயஷங்கர் என்பவர் இயக்கியிருந்தார். சீமான் இத்திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தார்.
இத்திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் அனைத்தும் இப்போதும் மிக பிரபலமாக ரசிக்கப்படுபவை ஆகும். இதில் ஒரு காமெடி காட்சியை குறித்து அப்பேட்டியில் பேசிய கொட்டாச்சி, “தவசி படத்திற்காக பொள்ளாச்சியில் ஷூட்டிங்கில் இருந்தோம். அப்போது பொன்னம்பலத்துக்கு மாலை போடும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியில் வடிவேலு உட்பட பலரும் ஆடிக்கொண்டே போவார்கள். ஆனால் நான் மட்டும் ஆடாமல் சிலை போல் நடந்துகொண்டே போனேன். எல்லாரும் ஆடும்போது நாம் ஆடாமல் இருந்தால்தான் பார்வையாளர்களின் கண்களுக்கு வடிவேலுவையும் தாண்டி தனித்து தெரிவோம் என்பதற்காக நான் அப்படி நடந்து சென்றேன்.
இதனை வடிவேலு கவனித்துவிட்டார். அதன் பின் ஆட்களை இடமாற்ற வைத்து நிற்க வைத்தார். நான் நின்ற இடத்தில் இருந்து கேமரா தெரியவில்லை. அதனை வடிவேலு மறைத்துக்கொண்டார். என்னிடம், ‘உன் கண்ணுக்கு கேமரா தெரியுதா?’ என கேட்டார். ‘இல்ல சார் எட்டிப்பார்த்தாதான் தெரியுது’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘கேமரா தெரியாமத்தான்டா நடிக்கனும்’ என்று சொன்னார். கேமரா தெரியாம நடிச்சா நான் எப்படி தெரிவேன். அப்படி என்றால் படம் முழுக்கவே கேமரா தெரியாமல்தான் நடிக்கப்போறோமா? என்று நினைத்துக்கொண்டேன்” என அப்பேட்டியில் கூறியுள்ளார்.