வைரமுத்து எழுத மறுத்த பாடல்… ஆனால் பட்டிதொட்டி எங்கும் ஹிட்… டிவிஸ்ட்டுன்னா இதுதான்!!

by Arun Prasad |   ( Updated:2022-10-08 15:28:07  )
வைரமுத்து எழுத மறுத்த பாடல்… ஆனால் பட்டிதொட்டி எங்கும் ஹிட்… டிவிஸ்ட்டுன்னா இதுதான்!!
X

கடந்த 2000 ஆம் ஆண்டு முரளி, பார்த்திபன், மீனா, மாளவிகா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “வெற்றிக்கொடி கட்டு”. இத்திரைப்படத்தை சேரன் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் சேரன் கேரியரிலேயே மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த நிறுவனத்தால் பணத்தை இழந்து தவிக்கும் கதாநாயகர்கள், தங்களது குடும்பங்களை எப்படி சமாளித்தார்கள் என்ற ஒன் லைன்தான் கதை. இதில் சென்ட்டிமென்ட், காதல் என கலந்துகட்டி, குடும்பங்கள் கொண்டாடும் வெற்றித் திரைப்படமாக உருவாக்கியிருந்தார் சேரன்.

இத்திரைப்படத்தில் தேவா இசையில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மாஸ் ஹிட். குறிப்பாக “கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு” பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. இப்பாடலை கவிஞர் பா விஜய் எழுதியிருந்தார். ஆனால் இப்பாடலை முதலில் எழுத இருந்தது கவிப்பேரரசு வைரமுத்து.

இப்பாடலின் உருவாக்கத்தின்போது தேவா, வைரமுத்துவிடம் ‘கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற தொடக்க வரியை கூறி, “கலரு” “பவரு” போன்ற ஆங்கில வார்த்தைகள் அமையும்படி இப்பாடலின் பல்லவி இருக்கவேண்டும் என கூறியிருக்கிறார். அதற்கு வைரமுத்து “பல்லவியில் ஆங்கில வார்த்தைகள் இருக்கிறதே, பல்லவியை மாற்றிவிடுவோம்” என கூறியிருக்கிறார்.

அதற்கு தேவா “இல்லை, பல்லவி இப்படித்தான் அமையவேண்டும்” என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இறுதியில் வைரமுத்து “இப்பாடலை என்னால் எழுதமுடியாது” என கூறிவிட்டாராம்.

அதன் பிறகுதான் பா விஜய் இப்பாடலை எழுதியிருக்கிறார். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். எனினும் “கருப்புத்தான் எனக்கு பிடிச்ச கலரு” பாடல் வேற லெவல் ஹிட் ஆனதெல்லாம் வரலாறு…

Next Story