Cinema News
அதை நினைச்சாலே என் வயிறு எரியுது… ஸ்ரீகாந்த் படத்தின் படப்பெட்டியை கடலில் தூக்கி எறிந்த தயாரிப்பாளர்…
வலைப்பேச்சு யூட்யூப் சேன்னல் மூலம் மிகவும் புகழ்பெற்ற பத்திரிக்கையாளராக தற்போது திகழ்ந்து வருபவர் அந்தணன். இவர் தமிழில் பத்திரிக்கைகள் பலவற்றிலும் பத்திரிக்கையாளாராக பணியாற்றியிருக்கிறார். நடிகர் ஸ்ரீகாந்த் “ரோஜா கூட்டம்” திரைப்படத்தில் அறிமுகமான நாளில் இருந்தே அவருடன் நெருங்கி பழகி வந்தவர் அந்தணன்.
“ரோஜா கூட்டம்” திரைப்படத்தை சசி இயக்க, ஆஸ்கார் ரவிச்சந்திரன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்தபோதே சசிக்கும் தயாரிப்பாளர் ரவிச்சந்திரனுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு படப்பிடிப்பு நின்றுபோனதாம்.
தனது முதல் திரைப்படமே இப்படி பாதியில் நின்றுபோனதை நினைத்து துவண்டுப் போய் உட்கார்ந்திருந்தாராம் ஸ்ரீகாந்த். இந்த நிலையில் அந்தணன், ஸ்ரீகாந்த்திடம் “நேராக ஆஸ்கர் ரவிச்சந்திரன் காலில் சென்று விழுங்கள். இந்த படம்தான் எனக்கு வாழ்க்கையே என்று கூறுங்கள். அவர் நிச்சயமாக திரைப்படத்தை மீண்டும் தொடங்குவார்” என யோசனை கூறியுள்ளார்.
அதன்படி ஸ்ரீகாந்த் நேராக தயாரிப்பாளரின் வீட்டிற்குச் சென்று அவரது காலில் விழுந்தாராம். ஸ்ரீகாந்த்தின் நிலைமையை பார்த்த ரவிச்சந்திரன் அவருக்காகவே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினாராம். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்தணன், ஸ்ரீகாந்த்தின் மிக நெருங்கிய நண்பராக ஆனாராம்.
இதன் பின் சில ஆண்டுகள் கழித்து அந்தணன், ஸ்ரீகாந்த்தை வைத்து “கிழக்கு கடற்கரைச் சாலை” என்ற திரைப்படத்தை தயாரித்தார். இத்திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. அத்திரைப்படத்தின் உருவாக்கத்தின்போது பல பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார் அந்தணன். இது குறித்து ஒரு பேட்டியில் அந்தணன், மனம் நொந்துப் போய் பகிர்ந்திருந்தார்.
“கடவுள் என் முன் தோன்றி என்னுடைய ஞாபகத்தில் இருந்து ஒரு வருடத்தை அழித்துவிடலாம் என்று எனக்கு வரம் கொடுத்தால், நான் 2006 ஆம் ஆண்டை எனது நினைவில் இருந்து அழித்துவிடுவேன். அந்த வருடத்தை நான் திரும்ப நினைத்தாலே எனக்கு நரக வேதனையாக இருக்கிறது. அப்படி ஒரு அசிங்கத்தை அவமானத்தை எனது வாழ்க்கையில் நான் பட்டதே கிடையாது.
எனது வீட்டில் கிழக்கு கடற்கரை சாலை திரைப்படத்தின் படப்பெட்டி இருந்தது. பெட்டியைக்கூட தூக்கி கடலில் எறிந்துவிட்டேன், அந்த திரைப்படத்தை எடுத்ததற்கான தடயமே இருக்கக்கூடாது என்று. அதன் பிறகுதான் நான் ஒரு புது மனிதனாக மாறினேன்” என அந்தணன் கூறியிருந்தார்.
மேலும் பேசிய அவர் “அத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த்தால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அந்த படத்தை நான் தயாரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. என்னுடைய நண்பர் ஒருவர் மிகப்பெரிய செல்வந்தராக திகழ்ந்தவர். அவர் மிக ஆர்வமாக இந்த படத்திற்கு ஃபைனான்ஸ் செய்தார். சில சம்பவங்களால் அவர் பாதியிலேயே இந்த படத்தை விட்டுப் போய்விட்டார். அதன் பிறகு அந்த படத்தை போராடி முடித்து வெளியே கொண்டு வருவதற்குள், ஒரு புது ஜென்மம் எடுத்தது போல் இருந்தது. அந்த சம்பவங்களை நான் மறக்கவே விரும்புகிறேன்” என மிகவும் மனம் நொந்தபடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.