2999 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம்... குஷியில் அஜித் ரசிகர்கள்...!
அஜித் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திரையில் வெளியாக உள்ள படம் என்றால் அது வலிமை தான். பல போராட்டங்கள் மற்றும் பிரச்சனைகளை தாண்டி வலிமை படம் வரும் 24 ஆம் தேதி நாடு முழுவதும் நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. ரசிகர்களும் படத்தை காண மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தற்போது முதல் படத்திற்கான முன்பதிவு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி புதிய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை கண்ட அஜித் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
அதன்படி வேலூர் மாநகராட்சியில் காகிதபட்டறை பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு பல்பொருள் அங்காடி தான் SIMCO. இந்த அங்காடியில் வியாபாரம் அதிகளவில் நடக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்து பொருள் வாங்குவோருக்கு வலிமை படத்திற்கான டிக்கெட் இலவசம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒருவர் சுமார் 2999 ரூபாய்க்கு மேல் மளிகைப் பொருள் வாங்கினால் தான் வலிமை படத்திற்கான டிக்கெட்டை பெற முடியும். அப்படி பொருள்கள் வாங்குபவர்களுக்கு காட்பாடி சில்க் மில்லில் உள்ள தனியார் திரையரங்கில் வலிமை படத்துக்கான இலவச டிக்கெட் மற்றும் பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் அடங்கிய 500 ரூபாய் தொகுப்பும் இலவசம் என அறிவித்துள்ளனர்.
ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் அஜித் படம் வெளியாவதால் நாடு முழுவதும் மிகவும் வேகமாக டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து வருகின்றன. இந்நிலையில் எப்படியாவது அஜித் படத்தை பார்க்க வேண்டும் என நினைக்கும் ரசிகர்கள் பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருவதால் கடையில் கூட்டம் அலைமோதி வருகிறதாம்.