7 கோடி செலுத்த உத்தரவு.. 48 மணி நேரம் கெடு.. வீர தீர சூரன் படத்திற்கு தொடரும் நெருக்கடி

veera
வீர தீர சூரன் பட விவகாரம் தொடர்பாக உடனடியாக 7 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது சம்பந்தமான வழக்குதான் இப்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் தான் வீர தீர சூரன். சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஷயன், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் வீர தீர சூரன்.
மதுரையை மையப்படுத்தி உருவாகும் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இந்தப் படம் உருவானது.ஜிவி பிரகாஷ் இசையில் பாடலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. இந்தப் படம் இன்று ரிலீஸாக இருந்த நிலையில் திடீரென டெல்லி நீதிமன்றம் இந்தப் படத்திற்கு இடைக்கால தடை விதித்தது. ஒரு படத்தின் ரிலீஸ் தேதி இப்போது ஓடிடி கையில்தான் இருக்கின்றது. ஓடிடி உரிமம் விற்கப்பட்டால்தான் ரிலீஸ் தேதியை அறிவிக்க முடியும்.
இந்தப் படத்தின் மீது மும்பையை சேர்ந்த பி4யு என்ற நிறுவனம் முதலீடு செய்திருந்தது. அந்த நிறுவனம் தான் இப்போது இந்த வழக்கை தொடர்ந்திருக்கிறார்கள். ஏனெனில் தயாரிப்பு நிறுவனம் ஓடிடி உரிமையை விற்கப்படாமலேயே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நிதி இழப்பீடு ஏற்பட்டிருப்பதால் 50 சதவீத தொகையை நஷ்ட ஈடாக திருப்பி தரும்படி அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது.
இதை விசாரித்த டெல்லி நீதிமன்றம் இன்று காலை 10.30 மணி வரைக்கும் படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடை விதித்தது. மேலும் இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்த போதுதான் இந்த உத்தரவானது பிறக்கப்பட்டிருக்கிறது. அதாவது 7 கோடி ரூபாயை உடனடியாக டெபாசிட் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதை போல இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்திற்குள் சமர்ப்பிக்கும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
மேலும் இந்தப் படத்தின் இடைக்கால தடை நீக்குவது தொடர்பான எந்த ஒரு உத்தரவும் இன்னும் வெளியாகவில்லை. சற்று நேரத்தில் அந்த உத்தரவும் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.