அறுபத்தோரு ஆண்டுகளுக்கு முன் ஆற்றின் நடுவில் அத்தனை பிரம்மாண்டம்....! என்னன்னு பார்த்தால் அசந்து போவீங்க...!
ஏவிஎம்மின் மாபெரும் வெற்றிப்படைப்புகளில் ஒன்று வீரத்திருமகன். 1962ம் ஆண்டு வெளியானது. ஆனந்தன், சச்சு, ஈ.வி.சரோஜா உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோரின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின.
அழகுக்கு அழகு, கேட்டது, நீலப்பட்டாடைக் கட்டி, பாடாத பாட்டெல்லாம், ரோஜா மலரே, வெத்தல போட்ட ஆகிய பாடல்கள் இன்றும் நம்மை மெய்மறந்து ரசிக்க வைப்பவை.
வீரத்திருமகன் படத்தை உருவாக்கிய விதமும், பிரம்மாண்டமாக செட் போட்டு பாடல் காட்சியை எடுத்த விதம் பற்றியும் இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.
ஏவிஎம்முக்கு வீரத்திருமகன் கதையை சொல்லி ஒப்புதல் வாங்கிவிட்டேன். 2 நாள்களில் எனக்கு அழைப்பு வந்தது. கதையைப் படமாக்குவற்கு சம்மதித்தனர்.
வீரத்திருமகன் படப்பிடிப்பு செவ்வனே நடந்து கொண்டு இருந்தது. எனது டைரக்ஷனில் செட்டியாருக்கு ஒரு பிடிமானம் வந்தது. ஒரு பெரிய நடனக்காட்சியை எப்படி எடுக்கலாம் என்ற என் வேண்டுகோளை அவரிடம் தயங்கி தயங்கி சொன்னேன்.
ஆற்றின் நடுவே ஒரு பெரிய தாமரை மொட்டு. அது இதழ் விரிக்க அரசிளங்குமரி நிமிர்ந்து மலர வேண்டும். சுற்றி 12 பெரிய தாமரை இலைகள் அதன் மீது 12 பெண்கள் நின்று சுழன்று ஆட வேண்டும். மலரும் நடுவே சுழல வேண்டும். இவ்வளவும் ஆற்றின் நடுவே நடக்க வேண்டும்.
மலரும், இலைகளும், பெண்களும் அதற்கு மேல் மிதந்து ஆட வேண்டும். எப்போதுமே எதையும், வித்தியாசமாக, பெரிதாக சோதனைகளுக்கு நடுவே படமெடுத்துப் பழகிய பெரியவருக்கு என் ஐடியா பிடித்து இருந்தது.
ஆனால், இதைச் சாதிக்க வேண்டுமே, எவ்வளவு பணம் தேவை, எவ்வளவு பேர் உழைத்து இதை உருவாக்க வேண்டும் என்று நினைத்தால் பிரம்மப் பிரயத்தனம் தான். ஆனால் என் குருநாதர் மனது வைத்தால் பாகீரதியையே வீட்டுத் தோட்டத்திற்குக் கொண்டு வந்து விடுவார்.
மகாபலிபுரம் போகும் பாதையில் ஆற்றின் பாலத்தை ஒட்டி ஒரு இடம் தீர்மானிக்கப்பட்டது.
ஆறுமுகச்சாரி என்ற செட்டிநாட்டுத் தச்சர் கலைஞர் அரங்க நிர்மாணிப்பின் தலைவராக இருந்தார். அவர் கோயில்களில் ரதம் விட்டு, தெப்பங்கள் விட்டு, மேடை மாளிகைகளைக் கட்டி செட்டி நாட்டையே கலக்கியவர். அவர் மரம், கயிறு, ராட்டினம் என்பதை எல்லாம் கலந்து விசை தயாரித்தார்.
இதெல்லாம் தண்ணீருக்கு அடியிலேயே மறைந்திருந்து வேலை செய்யும். இந்தக் காட்சியைக் கேமராவில் பிடிக்க நான் ஒரு 60 அடி உயரத்திற்கு சாரம் போட்டுக் கேட்டேன். அதுவும் ஆற்றில் அஸ்திவாரம் போட்டுக் கட்டித்தரப்பட்டது.
சூரிய ஒளி சரியாக விழ மதியம் 2 மணிக்கு மேல் தான் படப்பிடிப்புத் தொடங்க முடியும். 5.30 மணிக்கு அஸ்தமனமாகி விடும். இந்த அற்புதக் காட்சியின் சில அடிகளைப் பார்த்த பெரியவர், இதைக் கலரிலும் எடுங்கள் என்றார்.
இந்தக் கலர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட நடனக்காட்சியை நான் மேனாட்டு நண்பர்களுக்கு எல்லாம் போட்டுக்காட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்துவார். எல்லாமே கைவினைப் பொருள்களாலும், மனித உழைப்பாலும் ஆனவை. அதுதான் நீலப்பட்டாடை கட்டி என்ற பாடல்.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கிடையே ரோஜா மலரே ராஜகுமாரி என்ற பாடலைப் படமாக்கினோம். இன்றும் எப்எம்களில் அந்தப் பாடலை நேயர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு ரசிப்பார்கள். இனிமை கலந்த தேன்மதுரப் பாட்டு.