உனக்கு காமெடி வருமா?..அசிங்கப்படுத்திய இயக்குனர்...வெண்ணிற ஆடை மூர்த்தி என்ன செய்தார் தெரியுமா?...
நகைச்சுவையில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் அகலவாய் கொண்ட வெண்ணிற ஆடை மூர்த்தி. வக்கீலுக்குப் படித்துவிட்டு அந்த படிப்பையே மூட்டை கட்டி வைத்து திரையுலகில் நுழைந்தவர் நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.
இவர் நடிக்க வருவார் என்பது அவருக்கே தெரியாது. அது ஒரு சுவாரசியமான நிகழ்வு. அவர் கடந்து வந்த கரடுமுரடான பாதையும், சினிமாவில் நுழைந்த சுவாரசியத்தையும் அவரே சொல்ல கேட்போம்.
பட்டப்படிப்பை முடித்தவுடன் வேலை தேடி அலைந்தேன். எப்படியோ ஜெயின் கல்லூரியில் டியூட்டர் வேலை கிடைத்தது. அங்கு ஒரு வருஷம் வேலை பார்த்தேன். அதற்கு மேல் என்னால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நான் காலேஜில் படிக்கும் போது என்னென்ன சேட்டைகளை செய்தேனோ அதே எனக்கு ரிபீட் ஆனது.
பாடம் நடத்தும்போது மாணவர்களிடம் இருந்து திடீரென காகித அம்பு பறந்து வரும். திரும்பிப் பார்த்தால் எல்லோரும் அமைதியாக இருப்பார்கள். இந்த மாணவர்களின் சோதனை தொடர்ந்தது.
ஒருநாள் மாணவர்களை மிரட்டும் தொனியில் பேசினேன். ஆனாலும் உள்ளுக்குள் பயம் இருந்தது. உங்களில் யார் தப்பு செய்கிறார்கள் என்று எனக்கு நல்லா தெரியும். ஆனால் உண்மையிலேயே தெரியாது. நான் பிரின்சிபாலிடம் கம்ப்ளெய்ண்ட் செய்தால் உங்கள் நிலைமை என்னவாகும்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
நானும் உங்களைப் போல மாணவனாக இருந்து வந்தவன் தான். ஆனால் உங்களைப் போல சேட்டைகள் செய்ததில்லை. உண்மையில் இவங்களை விட நான் தான் ரொம்ப சேட்டை பண்ணுனேன். இனிமேலாவது ஒழுங்காக இருங்கள் என்றேன்.
ஆனால் எனக்கு சர்ப்ரைஸாக இருந்தது. மாணவர்கள் ஏதும் எதிர்பார்களோ என்று பயந்தேன். அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
காலேஜை விட்டு விலகியதும் சென்னை ரப்பர் தொழிற்சாலையில் சிறிது காலம் வேலை பார்த்தேன். கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்தும் நல்லா இருக்கும் என்பார்கள். அதே போல் இருந்ததால் மேலதிகாரிகள் எனக்கு பதவி உயர்வு கொடுத்தனர். அங்கும் என்னால் நிலைத்து நிற்க முடியவில்லை.
தொடர்ந்து செமிங்டன் கம்பெனியில் விற்பனை பிரிவில் மேனேஜராக வேலை பார்த்தேன். அது தினமும் ஊர்சுற்றும் வேலையாக இருந்தது. இதெல்லாம் ஒரு வேலையா என அங்கிருந்தும வந்துவிட்டேன்.
அதன்பிறகு தான் வக்கீலுக்குப் படிக்க ஆசை வந்தது. தொடர்ந்து நான் அதைப் படித்து தேர்ச்சி பெற்றேன். சட்டக்கல்லூரியில் படித்த போது சில ஆங்கில நாடகங்களை எழுதி நடிக்கவும் செய்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தொடர்ந்து ஒரு வக்கீலிடம் வேலை பார்த்தேன். அப்போதும் கலைத்துறையில் தான் ஆர்வம் இருந்தது. சினிமாவில் சேர முயற்சித்தேன். அப்போது விஸ்வநாதன் ராமமூர்த்தி குழுவைச் சேர்ந்த சாம் ஜோசப் அறிமுகமானார். அவர் என்னை டைரக்டர் ஸ்ரீதரின் சித்ராலயா கம்பெனிக்கு அழைத்துச் சென்றார். அவரது உதவியாளர் கோபுவிடம் அறிமுகப்படுத்தினார்.
அப்போது அவர், அன்று சிந்திய ரத்தம் படத்திற்கான நடிகர் தேர்வு முடிவானது. இதில் சிறிய வேடம் தான் உள்ளது. அடுத்தப் படத்தில் வாய்ப்பு தருகிறேன் என்றார். கையிருப்பு கரைந்து கொண்டே வந்தது. ஊரில் இருந்து பணம் அனுப்பச் செய்து செலவழித்தேன்.
அப்போது கிளப் ஹவுஸ் நண்பர் சக்தியை சந்தித்தேன். அவர் ஸ்ரீதரின் உதவியாளர். வெண்ணிற ஆடை என்ற படத்தில் நகைச்சுவை நடிகருக்கான தேர்வு நடைபெற உள்ளது என்றார். அவருடன் சேர்ந்து ஸ்ரீதரிடம் சென்றேன். என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட ஸ்ரீதர் நான் காமெடி நடிகராக நடிக்க முடியுமா என கேட்டார்.
சந்தர்ப்பம் கொடுங்கள். என் திறமையைக் காட்டுகிறேன் என்றேன். நடிப்பு, மேக்கப் டெஸ்ட் முடிந்தது. நான் சொல்லி அனுப்புகிறேன் என்றார். ஏமாற்றத்துடன் திரும்பினேன்.
2 மாதங்களுக்குப் பின் திடீரென கோபுவிடம் இருந்து அழைப்பு வந்தது. படப்பிடிப்பைப் பார்க்குமாறு என்னிடம் ஸ்ரீதர் கூறினார். ரொம்ப ஈசி...தூள் கிளப்பிவிடலாம் என நினைத்தேன்.
ஆனாலும் முதல் நாள் அல்லவா? கொஞ்சம் உதறல் எடுத்தது. ஃபேன் சுற்றியும் வியர்த்து வழிந்தது. ஸ்ரீதரும் கோபுவும் எளிமையாக நண்பர்களாகப் பழகியதால் கொஞ்சம் சமாளிக்க முடிந்தது.
படம் எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. நான் நகைச்சுவை நடிகராக ஜெயித்து விட்டேன். சார்லி சாப்ளின் தான் எனக்கு குரு. நடிகரான பின் பத்திரிகையாளனாகவும் பணிபுரிய வாய்ப்பு கிடைத்து. டைரக்டர் ஸ்ரீதரின் சித்ராலயா பத்திரிகையில் பணிபுரிந்தேன்.
எனக்கு எழுதுவதற்கு முழு சுதந்திரம் கொடுத்தார். கிருஷ்ணமூர்த்தி என்ற ஜோசியரிடம் நான் சென்று ஜாதகம் பார்த்தேன். அவர் என்னை நடிகனாவாய் என்றார். முதலில் நான் நம்பவில்லை. அது எனக்கு சம்பந்தம் இல்லாதத் தொழில் என்று நினைத்தேன். ஆனால் அது தான் எனக்கு செட்டானது.
வெண்ணிற ஆடை என்ற தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பெயர் வாங்கியதால் அந்தப்படத்தின் பெயரையே தன் பெயரின் அடைமொழியாக வைத்துக் கொண்டார்.