90களில் வெளியான நவரச நாயகனின் சூப்பர்ஹிட் படங்கள் - ஒரு பார்வை

Karthick
நடிகர் கார்த்திக்கின் படங்கள் என்றாலே ஒரு ரசிகர் பட்டாளம் வரிந்து கட்டிக் கொண்டு திரையரங்கை வந்து அமர்க்களப்படுத்தி விடும். ரசிகர்கள் இவருக்கு தந்த நவரச நாயகன் என்ற பட்டம் இவருக்குப் பொருத்தமானது தான்.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதே கதாபாத்திரமாக மாறி தனக்கே உரிய தனி ஸ்டைலுடன் ரசிகர்களுக்கு விருந்தாகத் தந்து தனி முத்திரை பதித்து விடுவார். 90களில் வெளியான இவரது சூப்பர்ஹிட் படங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
மௌனராகம்
1986ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம். மைக் மோகனும், நவரச நாயகனும் இணைந்து நடித்த படம். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தன. ரேவதி, வி.கே.ராமசாமி, காஞ்சனா, சோனியா உள்பட பலரும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
நிலாவே வா, மன்றம் வந்த, சின்ன சின்ன, ஓ மேகம் வந்ததோ, பனிவிழும் இரவு ஆகிய மனதிற்கு இதமான பாடல்கள் இந்தப்படத்தில் தான் உள்ளன.
அக்னி நட்சத்திரம்

Akni natchatram
80ஸ்களின் மனதில் நீங்காத நினைவலைகளை இன்று வரை ஏற்படுத்தும் ஒரு அழகிய படம் இது. இவர்கள் இப்போதும் இந்தப்படம் பார்க்கும் போது தன் இளமை ஊஞ்சலாடுவதை அசை போட முடியும்.
1988ல் வெளியான இந்தப்படத்தை மணிரத்னம் இயக்கினார். கார்த்திக், பிரபு இருவரும் படத்தில் போட்டி போட்டுக்கொண்டு நடித்து இருந்தனர். இருவரது ரசிகர்களும் திரையரங்கை நிறைத்து விட்டனர். இவர்களுடன் அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜனகராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின.
நின்னுக்கோரி வரணம், ஒரு பூங்கா வனம், ராஜா ராஜாத்தி, ரோஜாப் பூ ஆடி வந்தது, தூங்காத விழிகள், வா வா அன்பே அன்பே ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
இதயத்தாமரை
1990ல் கே.ராஜேஷ்வரின் இயக்கத்தில் வெளியான படம் இது. சங்கர் - கணேஷ் இசை அமைத்துள்ளார். கார்த்திக், ரேவதி, நிழல்கள் ரவி, ஜனகராஜ், பிரதீப் சக்தி, வெண்ணிற ஆடை மூர்த்தி, சார்லி, சின்னிஜெயந்த் உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஓ மை லவ், ஒரு காதல் தேவதை, யாரோடு யாரென்ற கேள்வி, ஏதோ மயக்கம், உன்னை ஏன் சந்தித்தேன், கண்ணே கதவு ஆகிய பாடல்கள் உள்ளன.
கிழக்கு வாசல்

kizhakku vasal
1986ல் ரசிகர்களின் நாடித்துடிப்பை அதிகரிக்கச் செய்த படம் இது. ஆர்.வி.உதயகுமாரின் இயக்கத்தில் கார்த்திக், ரேவதி, குஷ்பூ, சின்னி ஜெயந்த், மனோரமா, விஜயகுமார், ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் அழுத்தமான கதையும், அதற்கேற்ற பாடல்களும் பின்னிப்பிணைந்து ரசிகர்களின் ரசனையை பன்மடங்கு அதிகரிக்கச் செய்தன.
இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். அட வீட்டுக்கு, பச்சமலைப் பூவு, தளுக்கு தளுக்கி, பாடி பறந்த, வந்ததே ஓ குங்குமம் ஆகிய மனதைக் கவ்வும் பாடல்கள் இந்தப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.
கோபுர வாசலிலே
1991ல் பிரியதர்சனின் இயக்கத்தில் வெளியானது இந்தப்படம். கார்த்திக், பானுப்ரியா, நாசர், சார்லி, வி.கே.ராமசாமி, பூர்ணம் விஸ்வநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். சோகமும், காமெடியும் கலந்த வித்தியாசமான படம் இது.
இளையராஜாவின் வழக்கமான இசை கார்த்திக்கிற்கு இந்தப்படத்திலும் அழகான பாடல்களைத் தந்தன. தேவதைப் போல் ஒரு, காதல் கவிதைகள், கேளடி என் பாவையே, நாதம், பிரியசகி, தாலாட்டும் பூங்காற்று ஆகிய பாடல்கள் உள்ளன.