இரு கதாநாயகிகள் இருந்தும் வில்லியாக நடித்த நடிகைக்கே மாஸ்....ஜாஸ்தி.....யார் அந்த வில்லி?

by sankaran v |
இரு கதாநாயகிகள் இருந்தும் வில்லியாக நடித்த நடிகைக்கே மாஸ்....ஜாஸ்தி.....யார் அந்த வில்லி?
X

Rajasulochana

வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே...என ரசிகர்களின் மனங்களை மயக்க வைத்த நடிகை இவர். சிறந்த நடனக்கலைஞர்.

நாயகி, வில்லி, நகைச்சுவை, குணச்சித்திரம் என பன்முகத்திறன்களைக் காட்டிய நடிகை இவர். தனக்கான கதாபாத்திரங்களைத் துளி கூட பிசகாமல் மெருகேற்றி நடிப்பதில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் தான் இவர். ராஜ சுலோச்சனா. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மொழிப்படங்களில் நடித்து கொடி கட்டிப்பறந்தார்.

எம்ஜிஆர், சிவாஜி, தெலுங்கில் என்டிஆர், கன்னடத்தில் ராஜ்குமார் என அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்து தனது யதார்த்தமான அபார நடிப்பை வெளிப்படுத்தினார்.

1950களில் நடிக்க வந்த நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த நடிகை. இனிமையான குரலும், மென்மையாகப் பேசவும் தெரிந்த நடிகை. அவர் பேசும் வசனங்களே இதற்கு சாட்சி. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 15.8.1935ல் பிள்ளையார்சட்டி பக்தவச்சலம் நாயுடு, தேவகி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார்.

தந்தை பக்தவச்சலம் வெள்ளைக்காரன் காலத்தில் சென்னையில் ரயில்வேத்துறையில் பணிபுரிந்தார். பெற்றோர் இட்ட பெயர் ராஜீவ லோசனா. மழலை மொழியில் பள்ளியில் இவர் தன் பெயரை ராஜசுலோசனா என சொல்லவே அதுவே பெயரானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பன்மொழிப்படங்களிலும் நடித்துப் பட்டையைக் கிளப்பினார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டாலும், படித்தது வளர்ந்தது, நடித்தது எல்லாமே தமிழகத்தில் தான். இவரது தாய்க்கு நடனம், இசையில் நல்ல ஆர்வம் இருந்ததால் 8வயதிலேயே ராஜசுலோச்சனாவுக்கு வாய்ப்பாட்டு, வயலின், சப்தஸ்வரம் என கற்றுக்கொடுக்கப்பட்டது.

Rajasulochana

பின்னர் திரைப்படங்களில் திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா, பத்மினி இருவரும் ஆடுவதைப் பார்த்து தானும் அவர்களைப் போலவே நடனம் ஆட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே வளர்ந்தது. இதை அவரது பெற்றோரிடம் சொல்லவே மகளின் விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாமல் நாட்டியமும் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

திருவல்லிக்கேணியில் லலிதா என்பவரிடம் நாட்டியத்திற்கான ஆரம்பப் பாடத்தைக் கற்றார். பத்மினி, வைஜெயந்திமாலாவை உருவாக்கிய கே.ஏ.தண்டபாணியிடம் பரதநாட்டியம் கற்றார். குச்சுப்புடி, கதகளி நடனங்களையும் அந்தந்த வல்லுநர்களிடம் கற்றுத் தேர்ந்தார்.

1953ல் கன்னடத்தில் ஒரு சிறு வேடத்தில் அறிமுகமானார். இந்தப்படம் தமிழில் சத்திய சோதனை என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் 1952ல் வந்த பராசக்தி படத்திலேயே ராஜசுலோசனா சிவாஜியின் தங்கை கல்யாணியாக நடிக்க வேண்டிய வாய்ப்பு கிட்டியது. ஆனால் அந்த சமயத்தில் அவர் கர்ப்பவதியாக இருந்ததால் அந்த வாய்ப்பு ஸ்ரீரஞ்சனிக்கு கொடுக்கப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு முதல் படமாக வந்தது ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் வெளியான நால்வர் படம். தொடர்ந்து மாங்கல்யம், பெண்ணரசி ஆகிய படங்கள் ராஜசுலோசனாவை ரசிகர்கள் அனைவரும்; கவரும் வகையில் வெளியானது.

1955ல் வெளியான பெண்ணரசி படத்தில் ஒரு நாட்டின் அரசியல் நிர்வாகத்திற்குள் ஊடுருவி நாட்டின் அமைதியைக் குலைத்துவிடும் நாட்டியக்காரி ஜீவாவாக பேர் சொல்லும்படியான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

Rajasulochana

வில்லியாகவும், பி.எஸ்.வீரப்பாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். படத்தில் ஈ.வி.சரோஜா, சூரியகலா என இரு கதாநாயகிகள் இருந்தும் நாட்டியக்காரி ஜீவாவின் நடனத்தில் தான் ரசிகர்கள் அனைவருமே சொக்கிப்போனார்கள்.

அப்போது அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என அவரது வீட்டு வாசலில் ரசிகர்கள் வந்து குவிந்துள்ளனர். மர்மவீரன், அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா, எம்ஜிஆருடன் குலேபாகவாலி ஆகிய படங்களிலும் நடித்தார். சிவாஜியுடன் அம்பிகாவதி படத்தில் நடித்தாராம்.

1955ல் வெளியான டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான குலேபாகாவலியில் தன் வசீகரிக்கும் சிரிப்பாலும், சொக்க வைக்கும் பார்வையாலும் ரசிகர்களை இருக்கையை விட்டு எழ முடியாதவாறு கட்டிப்போட்டுள்ளார் டி.ஆர்.ராஜகுமாரி. அவருடன் காந்தக்கண்ணழகி ஜி.பரலட்சுமி நடித்துள்ளார்.

Rajasulochana

3வது நாயகியாக வந்த ராஜசுலோச்சனா தனக்கே உரிய தனி நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
ஆசையும் நேசமும் ரத்தப்பாசத்தினால் ஏங்குவதைப் பாராயடா என்ற பாடலில் ஆதிவாசிப் பெண்ணாகக் கள்குடித்து போதையில் மயங்கிய பெண்ணாகவும் வார்த்தைக்கு வார்த்தை விக்கலுடனும் தள்ளாடிக்கொண்டே இவர் ஆடிய ஆட்டம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது.

1958ல் வெளியான தை பொறந்தால் வழி பிறக்கும் படத்தில் எஸ்எஸ்ஆரின் தங்கையாக நடித்துள்ளார். படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் தை பொறந்தால் வழி பிறக்கும் பாடல் பொங்கலின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்தது. சிறுநீரகப் பிரச்சனையால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனது 98வது வயதில் 2013ம் ஆண்டு காலமானார்.

Next Story